மிரட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்...மெர்சலான ஆஸ்திரேலிய பௌலர்கள்..ஆஸி.க்கு 353 டார்கெட்!

  ராஜேஷ்.S   | Last Modified : 09 Jun, 2019 07:32 pm
worldcup-352-runs-target-australia

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணிக்கு 353 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக தவான், ரோஹித் ஷர்மா களமிறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். அதேசமயத்தில், ஆஸி., பவுலர்களும் (ஸ்டார்க், கம்மின்ஸ், கல்டர் நைல்) அவர்களை ரன் எடுக்கவிடாமல் துல்லியமாக பந்து வீசினர்.

இதனால், முதல் 10 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அதன் பிறகு தவான், ரோஹித் ஷர்மா ரன்களை சேர்க்க தொடங்கினர் . தொடர்ந்து ஆடிய தவான் 53 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார். இவரைத்தொடர்ந்து சிறிது நேரத்திலேயே ரோஹித்தும் 61 பந்துகளில் அரைசதம் அடித்தார். அத்துடன், இந்தியா 19 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. 

ரோஹித் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நைல் பந்துவீச்சில் கீப்பர் கேரியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் விக்கெட் ஜோடி 127 ரன்கள் எடுத்தது. இதையடுத்து,  களமிறங்கிய கோலி தொடக்கத்தில் இருந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஒரு பக்கம்  95 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் தனது சதத்தை தவான் பதிவு செய்தார்.  அணியும் 33.5 ஓவர்களுக்கு 200 ரன்களை கடந்தது.

சதத்தை கடந்து நன்றாக ஆடி வந்த தவான்  117 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்டார்க் பந்துவீச்சில் லைனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதையடுத்து, களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி இருக்கனும், அவரது கேட்ச்சை கீப்பர் மிஸ் செய்தததால்,  பாண்ட்யாவும் டக் அவுட்டிலிருந்து  தப்பி்த்தார். 

இதன் பிறகு பாண்டியா ருத்ரதாண்டவம் ஆடினார்.  இதனிடையே, கேப்டன் கோலி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 50-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து,  அதிரடி காட்டிய பாண்டியா அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 27 பந்தில் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் (46.5 ஓவர்)  301 என இருந்தது.  

இதைத்தொடர்ந்து களமிறங்கிய தோனியும் அதிரடியாக ஆடினார். ஸ்டார்க் வீசிய ஒரு ஓவரில் கோலி சிக்ஸ் பறக்கவிட,  ஸ்டார்க்கின் அடுத்த ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என தோனி தெறிக்கவிட்டார்.

தனது பங்குக்கு 14 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஸ்டொனியிஸ் பாலில் தோனி ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராகுல் தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸராக பறக்கவிட்டார். நன்றாக ஆடிவந்த கோலியும் 82 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்தியா 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 353 ரன்களை நிர்ணயித்துள்ளது. ராகுல் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் (352 ரன்கள்) இதுவாகும். 

அதிகபட்சமாக தவான் 117, கோலி 82 ,ரோஹித் 57  ரன்கள் எடுத்தனர், ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டோனியிஸ் 2, ஸ்டார்க்,  நைல், கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close