ஐயையோ... வடபோச்சே கதையான பாகிஸ்தானின் செமி ஃபைனல் கனவு !

  கிரிதரன்   | Last Modified : 04 Jul, 2019 04:23 pm
wcc2019-pakistan-virtually-out-from-semi-final-race

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுடனான ஆட்டங்களில் தொடர் தோல்வியை தழுவி வந்த பாகிஸ்தான், செமி ஃபைனலுக்கான சீனிலேயே இல்லை. ஆனால், முதல் பாதி டல்லாக போகும் ஒரு சினிமா, இடைவேளைக்கு பிறகு பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக இருந்தால் ரசிகர்களுக்கு எப்படியிருக்கும்?

அதேபோன்று, இத்தொடரின் இரண்டாவது பாதியில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் என அடுத்தடுத்து, மூன்று அணிகளுடன் ஹாட்ரிக் வெற்றியை பெற்ற பாகிஸ்தான் அணி, செமி ஃபைனலுக்கான கோதாவில் குதித்து தமது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்தது.

இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின்போது, 9 புள்ளிகளுடன் பட்டியலில் பாகிஸ்தான் அணி நான்காவது இடத்தில் இருந்தது. அப்போது 8 புள்ளிகளுடன்  ஐந்தாம் இடத்தில் இருந்த இங்கிலாந்து, இந்தியாவுடனான போட்டியில் தோல்வியை தழுவினால், வங்கதேச அணியுடன் தாங்கள் ஆடவுள்ள கடைசி போட்டியில் எப்பாடுபட்டாவது ஜெயித்து, 11 புள்ளிகளுடன் செமி ஃபைனலுக்குள் நுழைந்துவிடலாம் என மனக்கணக்கு போட்டு வைத்திருந்தார் பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபராஸ் அகமது.

ஆனால், இந்தியாவுடனான போட்டியில், இங்கிலாந்து வெற்றி பெற்று, 10 புள்ளிகளுடன் பட்டியலில் மீண்டும் நான்காவது இடத்துக்கு முன்னேறியது. இதனால், ஆசை நிராசை ஆனாதே... நம்பிக்கை பொய்த்து போனதே..என  பாகிஸ்தான் ரசிகர்கள் புலம்பும்படி ஆகிவிட்டது.

சரி... இந்தியாவுடனான மேட்ச் போனால் போகட்டும்... நியூசிலாந்து உடனான போட்டியிலாவது இங்கிலாந்து தோற்றால், செமி ஃபைனலில் நுழைய மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்குமென ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது பாகிஸ்தான் அணி.

ஆனால், நியூசிலாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இங்கிலாந்து அபார வெற்றி பெற்றதன் மூலம், 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. 11 புள்ளிகள் மற்றும் + 0.175 ரன் ரேட்டுடன், நியூசிலாந்து அணி தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.

இத்தகைய சூழலில், 9 புள்ளிகள் மற்றும் -0.792 ரன் ரேட்டுடன் ஐந்தாம் இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, செமி ஃபைனல் சுற்றுக்கு முன்னேறி வேண்டுமானால் தற்போது ஒரேயொரு வாய்ப்பு தான் உள்ளது. 

வங்கதேச அணியுடனான  நாளைய போட்டியில் டாஸ் வெல்லும்பட்சத்தில், பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 400 ரன்களுக்கு மேல்  அடிக்க வேண்டும். அத்துடன் வங்கதேசத்தை 100 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். அதாவது, வங்கதேசத்தை பாகிஸ்தான் 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.

அப்படியொரு அதிசயம் நிகழ்ந்தால், நியூசிலாந்துக்கு இணையாக 11 புள்ளிகள் பெற்றாலும், ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெறலாம். ஆனால், வங்கதேச அணி தற்போது இருக்கும் ஃபாமுக்கு  அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்பதால், வடபோச்சே கதையாகிவிட்டது பாகிஸ்தானின் ஃசெமி பைனல் கனவு.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close