செமி ஃபைனலில் இன்று ஜெயிக்கப் போவது இந்தியாவா....நியூசிலாந்தா... மழையா?!

  கிரிதரன்   | Last Modified : 09 Jul, 2019 08:23 am
wcc2019-semi-final-i-ndia-vs-new-zealand-match-preview

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது அரையிறுதி எனும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் இன்று பலபரீட்சை நடத்த உள்ளன.

ரவுண்ட் ராபின் சுற்றில் நடைபெற்ற ஒன்பது போட்டிகளில் எட்டில் வெற்றி. திருஷ்டி கழித்தது போல, இங்கிலாந்து அணியுடனான ஒரேயொரு ஆட்டத்தில் மட்டும் தோல்வி என, 15 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் பிடித்த கெத்துடன், இந்திய அணி செமி ஃபைனலில் களமிறங்க உள்ளது. மறுபுறம், பாகிஸ்தானுக்கு சமமாக 11 புள்ளிகளே பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து அதிர்ஷ்டவசமாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து.

பேட்டிங், பௌலிங் கலக்கல்... இந்திய அணியை பொறுத்தவரை, வேர்ல்டு கப்பில் பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் கலக்கி வருகிறது. என்றாலும் ஓப்பனிங் பேஸ்ட்மேன்களான ரோஹித் சர்மா, கே. எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை எவ்வளவு சீக்கிரம் வீழ்த்துகிறார்களோ அவ்வளவு சீக்கிரம் எதிரணியினர் ஆட்டத்தை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் செய்து விடுகின்றனர். இந்த வாய்ப்பை இன்றைக்கு நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தந்துவிடக் கூடாது. 

இதேபோன்று, அணிக்கு அதிக ரன் தேவைப்படும் நேரத்தில் களமிறக்கப்படும் ஹர்த்திக் பாண்டியா, அதிரடியாக ஆடவும்தான் செய்கிறார். ஆனாலும், வேகத்துடன் அவர் கொஞ்சம் விவேகமாகவும் விளையாடினால், தனது விக்கெட்டை திடீரென பறிகொடுக்காமல், இன்னும் அதிக ரன்களை அடிக்கலாம். தோனி, தினேஷ் கார்த்திக் போன்ற அனுபவ ஆட்டக்காரர்கள் தங்களின் வித்தைகளை இன்று நிச்சயம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

பெளலிங்கை பற்றி பேசினால் முதலில் நம் நினைவுக்கு வருபவர் பும்ரா தான். ஒரு நாள் போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்துவதைவிட ரன்களை அதிகம் கொடுக்காமல் பௌலிங் செய்வது ரொம்ப முக்கியம். இதில் பும்ரா கைதேர்ந்தவராக உள்ளார். இவரை போன்றே முகமது சமி, புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட சக பௌலர்களும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு ரன்களை அளந்து அளந்து கொடுத்தால், இந்தியாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

கேப்டனை நம்பி... நியூசிலாந்தின் பேட்டிங்கை பொருத்தவரை, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்டின் கப்டில் உள்ளிட்டோர் இத்தொடரில் சொல்லும்படி விளையாடவில்லை. அணியின் பேட்டிங் சுமை முழுவதையும் கேப்டன் வில்லியம்சன் மற்றும் அனுபவ ஆட்டக்காரரான ரோஸ் டெய்லரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

உலகக்கோப்பை அரையிறுதி போட்டி போன்ற முக்கிய ஆட்டத்தில் குறிப்பிட்ட சில நபர்களை மட்டுமே நம்பி களமிறங்குவது சரியாக இருக்காது. எனவே, இன்றைய போட்டியில் ஹென்றி நிக்கோலஸுக்கு பதிலாக, கோலின் முன்ரோவை களமிறக்கினால், அவர் பேட்டிங்கிற்கு வலு சேர்ப்பார்.

பௌலிங்கில் டிரன்ட் போல்ட் வழக்கம்போல் ஓபனிங் ஓவர்களில் இன்றும் கலக்குவார் என எதிர்பார்க்கலாம். இவருடன் லாக்கி ஃபெர்குசன் இன்றைய போட்டியில் மீண்டும் விளையாடினால், ஆரம்பகட்ட ஓவர்களை விக்கெட் இழப்பின்றி கடப்பது ரோஹித், ராகுலுக்கு கடும் சவாலாகதான் இருக்கும். இந்த தொடரில் எதிர்பார்த்த அளவு சொபிக்காத மேத் ஹென்றி, பந்துவீச்சில் தனது சிறப்பான பங்களிப்பை தந்தால்தான், இந்தியாவுக்கு நெருக்கடியை தர இயலும்.

மிரட்டும் மழை... இந்தியா -நியூசிலாந்துக்கு இடையேயான அரையிறுதி போட்டி, மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. அங்கு இன்று மழை பொழிய அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அப்படி மழை பெய்து, ஆட்டம் தாமதமாக தொடங்கும்பட்சத்தில், பிட்ச்சை தவிர்த்து மைதானத்தில் ஈரப்பதம் இருக்கதான் செய்யும். இருப்பினும், அரையிறுதி ஆட்டம் என்பதால், இந்தியா டாஸில் வெற்றி பெற்றால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து தான் நல்லது.

பார்ப்போம்...இன்றைய போட்டியில் வெல்லப் போவது இந்தியாவா... நியூசிலாந்தா...அல்லது மழையா?! என்று...

வி.ராமசுந்தரம்

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close