இந்தியாவை வென்ற இங்கிலாந்து, நியூசிலாந்து... இருவரில் யாருக்கு வேர்ல்டு கப்?

  கிரிதரன்   | Last Modified : 14 Jul, 2019 04:48 pm
wcc2019-eng-vs-nz-final-match-preview

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று மிக முக்கியமான நாள். ஆம்.... கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த இத்திருவிழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இந்த அதிரடி திருவிழாவின் முடிவில் பட்டம் சூடப்போகிறவர்கள் யார் என்று இன்றிரவு தெரிந்துவிடும்.

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் பலபரீட்சை நடத்தி வருகின்றன. இதுவரை நடைபெற்றுள்ள 11 உலகக்கோப்பை போட்டிகளில் இவ்விரு அணிகளும் அரையிறுதி மற்றும்  இறுதிப் போட்டிக்கு பலமுறை தகுதி பெற்றிருந்த போதிலும், இங்கிலாந்தோ, நியூசிலாந்தோ ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. எனவே, அடிப்பட்ட இரு சிங்கங்கள் முதல்முறையாக இறுதி போட்டியில் மோத உள்ளதால், ஆட்டத்தில் வழக்கத்தைவிட அதிகமாகவே அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தூணாய் நிற்கும் கேப்டன் : நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்டின் குப்டில் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் இத்தொடரின் ரவுண்ட் -ராபின் சுற்று போட்டிகள், அரையிறுதி போட்டி என எதிலும் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து பிராயச்சித்தமாக இன்றைய  ஃபைனல் போட்டியில் இருவரும் சிறப்பான துவக்கத்தை தந்தே ஆக வேண்டும்.

இவர்கள் இருவரும் சிறப்பான துவக்கத்தை தந்தாலும் தராவிட்டாலும், நியூசிலாந்தின் பேட்டிங் அந்த அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் அனுபவ ஆட்டக்காரரரான ராஸ் டெய்லரையே பெரிதும் நம்பியுள்ளது.  இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற, இந்த இருவரின் பேட்டிங் தான் முக்கிய காரணம் எனச் சொன்னால் அது மிகையாது. வில்லியம்சன்னும், டெய்லரும் இன்றும் பேட்டிங்கில் பட்டையை கிளப்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

பௌலிங்கை பொருந்தவரை, ட்ரென்ட் போல்டும், மேத் ஹென்றியும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிறப்பாகவே பந்துவீசி வருகின்றனர். அதுவும் குறிப்பாக, அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் தொடக்க மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒன்றை இலக்க ரன்களுடன் ஆட்டமிழக்க செய்து நியூசிலாந்து அதிர்ச்சி வைத்தியம் அளித்ததற்கு இவ்விரு வேகப்பந்து வீச்சாளர்களே காரணம். இங்கிலாந்தின் பேட்டிங் ஆர்டரை நிலைகுலைய செய்ய வேண்டுமென்றால், போல்டும், ஹென்றியும் பௌலிங்கில் இன்றும் விஸ்வரூபம் எடுத்தே ஆக வேண்டும்.

அரை டஜன் பேட்ஸ்மேன்கள் : இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய பலமே அதன் பேட்டிங் ஆர்டர்தான். ஜேசன் ராய், பேரிஸ்டவ், ஜாய் ரூட், மோர்கன், ஸ்டோக்ஸ், பட்லர் என அந்த அணியின் ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டர் என, அரைடஜன் பேட்ஸ்மேன்கள் செம ஃபாமில் உள்ளனர். இதில், ராய், பேரிஸ்டாவ், ரூட் ஆகியோர் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தலா 400 பிளஸ் ரன்களை அடித்துள்ளனர். இன்றைய இறுதி போட்டியிலும் இவர்களின் மாயாஜால பேட்டிங்கை கட்டுப்படுத்துவது நியூசிலாந்து பௌலர்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

வோக்ஸ் மற்றும் ஜஃப்ரா ஆச்சரின் அருமையான பந்துவீச்சு நியூசிலாந்தின் ரன் எடுக்கும் வேகத்தை கட்டுப்படுத்தும் என்பதுடன், விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்த உதவும். லாட்ஸ் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அடில் ரஷீத்தின் ஸ்பின் பௌலிங்கும் இன்று மாயாஜாலம் நிகழ்த்தும் என எதிர்பார்க்கலாம்.

ஃபஸ்ட் பேட்டிங் : நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், லண்டன் லாட்ஸ் மைதானத்தில் இதுவரை நடைபெற்றுள்ள 5 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்துள்ள அணிகளே வெற்றி பெற்றுள்ளன. அதிலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளன. எனவே, இன்றைய இறுதி போட்டியிலும் டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். இதன்படி, டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். பார்ப்போம்... உலக்கோப்பையை வெல்லப் போவது யாரென்று?

இன்றைய போட்டியில் மோதும் இங்கிலாந்து அணி, இந்தியாவை ரவுண்ட் - ராபின் சுற்றிலும், நியூசிலாந்து அணி அரையிறுதி போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தியுள்ளன. எனவே, இவ்விரு அணிகளில் யார் வெற்றி பெற்றாலும், அது இந்தியாவை வென்ற அணியே உலகக்கோப்பையை கைப்பற்றுவதாகவேயாகும். இந்த விதத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெருமையும், ஆறுதலும் கொள்ளலாம்.

வி.ராமசுந்தரம்,

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close