தென் கொரியாவை வீழ்த்தியது மெக்சிகோ!

  Newstm News Desk   | Last Modified : 24 Jun, 2018 07:25 am

mexico-beats-south-korea

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், மெக்சிகோ அணி, தென் கொரியாவை 2-1 என வீழ்த்தியது. 

முதல் போட்டியிலேயே ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த மெக்சிகோ, தென் கொரியவுடன் மோதியது. இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது தென் கொரியா. ஆரம்பம் முதல் மெக்சிகோ முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. 

மெக்சிகோவின் கார்லோஸ் வேலா, லொசனோ மற்றும் ஹெர்னாண்டஸ் ஆகியோர் தொடர்ந்து  அதிரடி அட்டாக் செய்து, தென் கொரியாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். 26வது நிமிடத்தின் போது, தென் கொரிய வீரர் கையால் பந்தை தடுத்தார். இதனால் நடுவர் மெக்சிகோவுக்கு பெனால்டி வாய்ப்பு கொடுத்தார். அதில், கார்லோஸ் வேலா கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 

இதைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் சன் ஹியுங் மின் தலைமையில் தென் கொரியா தனது அதிரடியை காட்டியது. பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், தென் கொரியா கோல் முன் சொதப்பி வந்தது. 66வது நிமிடத்தில், மெக்சிகோ செய்த ஒரு சூப்பரான கவுன்ட்டர் அட்டாக்கின் முடிவில் மெக்சிகோவின் ஹெர்னாண்டஸ் கோல் அடித்து போட்டியை 2-0 என ஆக்கினார். கோல் அடிக்க முடியாமல் திணறி வந்த தென் கொரியாவின் சார்பாக, 90வது நிமிடத்தில் சன்  ஹியுங்-மின் அட்டகாசமான ஒரு கோல் அடித்தார். ஆனால், இறுதியில் மெக்சிகோ 2-1 என தனது இரண்டாவது உலகக் கோப்பை வெற்றியை பதிவு செய்தது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.