ஐ.எஸ்.எல் கோப்பையை மீண்டும் வெல்லுமா சென்னை? ஒரு அலசல்...

  SRK   | Last Modified : 16 Mar, 2018 09:28 pm

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இறுதி போட்டியில் சென்னை அணி பெங்களூருவுடன் மோதுகிறது. 4வது ஆண்டாக நடைபெறும் ஐ.எஸ்.எல் சாம்பியன்ஷிப்பை கொல்கத்தா 2 முறையும், சென்னை ஒரு முறையும் வென்றுள்ளது.

பிளே ஆப் சுற்றுக்கு முன் நடைபெற்ற 18 போட்டிகளில் 13ல் வெற்றி பெற்று முதலித்தில் இருந்தது பெங்களூரு. முழுமையான ஆதிக்கம் செலுத்தி விளையாடிவரும் அந்த அணியை வீழ்த்த, சென்னை உச்சகட்ட பார்மில் இருக்க வேண்டும்.

3 ஆண்டுகளாக சென்னையின் பயிற்சியாளராக இருந்த இத்தாலிய நட்சத்திர வீரர் மார்கோ மாட்டராசி, கடந்த ஆண்டு விலகினார். அவரை தொடர்ந்து ஜான் க்ரெகரி பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு கீழ் சென்னை அணி மிக சிறப்பாக விளையாடி வருகிறது.

தொடரின் முதல் போட்டியில் தோற்றாலும், அடுத்து விளையாடிய 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று அசத்தியது சென்னை. நடுவில் ஃபார்மை இழந்து லீக் பட்டியலில் கீழே இறங்கி, பின்னர் கடைசி 5 போட்டிகளில் 2 வெற்றி 3 டிரா என சிறப்பாக விளையாடி 2வது இடத்தை பிடித்தது.

லீக் போட்டிகளில் பெங்களூருடன் 2 முறை மோதிய சென்னை, ஒன்றில் வென்று, ஒன்றில் தோற்றது. தங்கள் வசம் பந்தை அதிக நேரம் வைத்து விளையாடும் தன்மை கொண்ட பெங்களூரு, முதல் போட்டியில் சென்னையின் தடுப்பரணை உடைக்க முடியாமல் தவித்தது.

அசத்தலாக தடுப்பு ஆட்டம் ஆடி வரும் சென்னை அணியின் டிபன்ஸ் வீரர் மெயில்சன் ஆல்வஸ், 5 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூரை வீழ்த்த வேண்டுமென்றால், இவரது பெர்பார்மன்ஸ் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி, இதுவரை 13 கோல்கள் அடித்துள்ளார். அந்த அணியின் அட்டாக் முழுவதும் சேத்ரியை மையமாக கொண்டே அமையும். எனவே, அவரை தடுப்பது, சென்னை டிபன்ஸ் வீரர்கள் மெயில்சன் மற்றும் சேரினோவுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும்.

சென்னையின் பயிற்சியாளர் ஜான் க்ரெகரி, லீக் போட்டிகளில் பெரும்பாலும் 4-2-3-1 என்ற ரீதியில் வீரர்களை நிறுத்தி வெற்றி கண்டார். ஆனால், கோவாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியியல் அதிரடியாக 4-4-2 என திட்டத்தை மாற்றினார். இதன்மூலம், 18 கோல்கள் அடித்திருந்த கோவாவின் நட்சத்திர வீரர் கோரோவை கட்டம் கட்டி செயலிழக்க வைத்தார்.

சென்னையில் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில், கோவாவை 3-0 என துவம்சம் செய்தது சென்னை. கோவாவை போல 'அட்டாக்' செய்து விளையாடும் பெங்களூருவை வீழ்த்த, சென்னை அணி அதிரடி கவுண்ட்டர் அட்டாக் திட்டத்தை பின்தொடரும்.

நட்சத்திர ஸ்ட்ரைக்கர் ஜேஜே, தனது கலக்கல் பார்மை இறுதி போட்டியிலும் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேஜேவுக்கு கோல் வாய்ப்புகளை உருவாக்கும் முழு பொறுப்பும், மிட்பீல்டு வீரர்கள் ரபேல் அகுஸ்டோ மற்றும் க்ரேகரி நெல்சனிடம் வந்து சேரும்.

எதிரணியை தனது சிறப்பான பாஸிங் விளையாட்டால் வீழ்த்தும் பெங்களூருவுக்கு, பொறுமையாக எதிரணியை பிரித்து தாக்கும் சென்னை, நிச்சயம் சிம்ம சொப்பனமாக அமையும். கோப்பையை யார் வெல்வார்? நாளை பார்க்கலாம்....

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close