மெஸ்ஸி சூப்பர் ஹேட்ரிக்; 650 கோல்கள் அடித்து புதிய சாதனை

  Newstm Desk   | Last Modified : 24 Feb, 2019 05:09 am
messi-scores-hattrick-reaches-650-goal-mark

ஸ்பெயின் நாட்டின் லா லிகா கால்பந்து தொடரில், பார்சிலோனா மற்றும் செவில்லா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய போட்டியில், சரிவில் இருந்த பார்சிலோனாவை ஹேட்ரிக் கோல்கள் அடித்து வெற்றி பெற வைத்தார் நட்சத்திர வீரர் மெஸ்ஸி.

ஸ்பெயின் நாட்டின், லா லிகா கால்பந்து தொடரில், பார்சிலோனா அணி சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் தடுமாறியதால், தொடர்ந்து புள்ளிகளை இழந்து வருகிறது. கடந்த 5 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் பலம் வாய்ந்த செவில்லாவுடன் பார்சிலோனா மோதியது.

பார்சிலோனா ஆதிக்கம் செலுத்தி போட்டியை துவக்கினாலும், 22வது நிமிடத்தில் செவில்லாவின் நவாஸ் கோல் அடித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, அற்புதமான கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். முதல் பாதி முடியும் நேரத்தில், செவில்லாவின் மெர்க்காடோ கோல் அடிக்க, முதல்பாதி 2-1 என செவில்லாவிற்கு சாதகமாக முடிந்தது.

இரண்டாவது பாதியில் கோலடிக்க, பார்சிலோனா கடும் முயற்சி செய்தும், கோல் கிடைக்கவில்லை. 67வது நிமிடத்தின் போது, மாற்று வீரராக களமிறங்கிய டெம்பெலே கொடுத்த பாஸை, மெஸ்ஸி சூப்பர் ஷாட் அடித்து கோலாக்கி, போட்டியை சமன் செய்தார். இரண்டு அணிகளும் கடைசி கட்டத்தில் மாறி மாறி வாய்ப்புகளை உருவாக்கி வந்தன. 85வது நிமிடத்தில், பார்சிலோனாவின் அலெனா அடித்த பந்து கோல் கீப்பர் கைகளில் பட்டு சிதற, அதை மெஸ்ஸி சுலபமாக 'சிப்' செய்து கோலுக்குள் தள்ளி, தனது ஹேட்ரிக்கை பூர்த்தி செய்தார். 3வது கோலோடு, மெஸ்ஸி தனது கால்பந்து வரலாற்றிலேயே 650 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இது அவர் அடிக்கும் 50வது ஹேட்ரிக் கோல்களாகும்.

ஆட்டம் முடியும் நேரத்தில் மெஸ்ஸி கொடுத்த ஒரு சூப்பர் பாஸை பயன்படுத்தி சுவாரஸ் கோல் அடித்து, 4-2 என பார்சிலோனா வெற்றி பெற உதவினார். இந்த வெற்றியை தொடர்ந்து லா லிகா பட்டியலில், பார்சிலோனா 10 புள்ளிகள் முன்னிலையில் முதலிடத்தில் தொடர்கிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close