ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடட், பலம்வாய்ந்த பார்சிலோனாவுடன் மோதுகிறது. அதேபோல மான்செஸ்டர் சிட்டி, டாட்டன்ஹேமுடன் மோதுகிறது.
இரு தினங்களுக்கு முன், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 16 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், காலிறுதிச் சுற்றுக்கு 8 அணிகள் முன்னேறின. தொடரில் பங்கேற்ற இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைட்டட், லிவர்பூல் மற்றும் டாட்டன்ஹேம் ஆகிய நான்கு அணிகளுமே காலிறுதிக்கு முன்னேறியது, இங்கிலாந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது.
ஸ்பெயினிலிருந்து பார்சிலோனா, இத்தாலியிலிருந்து ஜுவென்ட்டஸ், நெதர்லாந்திலிருந்து அஜாக்ஸ், போர்ச்சுகலிலிருந்து போர்ட்டோ ஆகிய 4 அணிகளும் மற்ற 4 இடங்களை பிடித்தன. இந்த நிலையில், இன்று காலிறுதிச் சுற்றில் எந்தெந்த அணிகள் மோதுகின்றன என்பது, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் ஜுவென்ட்டஸ் அணி, நெதர்லாந்தின் அஜாக்ஸுடனும், இங்கிலாந்து சாம்பியன்களான மான்செஸ்டர் சிட்டி, மற்றொரு இங்கிலாந்து அணியான டாட்டன்ஹேமுடனும் மோதுகின்றன.
கடந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறிய லிவர்பூல், போர்ட்டோ அணியுடனும், ஸ்பெயின் சாம்பியன்களான பார்சிலோனா, இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைட்டட் அணியுடனும் மோதுகின்றன. நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் பார்சிலோனா - மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் மான்செஸ்டர் சிட்டி - டாட்டன்ஹேம் அணிகள் மோதும் இரண்டு போட்டிகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காலிறுதிச் சுற்று போட்டிகள் அடுத்த மாதம் 9ம் தேதி துவங்குகின்றன.
newstm.in