எவரெஸ்டை தொட்ட வீராங்கனைக்கு கோவிலில் நேர்ந்த சோகம்

  Anish Anto   | Last Modified : 26 Dec, 2017 08:50 am

எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மாற்று திறனாளி வீராங்கனையான அருணிமா சின்ஹா, கோவில் ஒன்றில் தனது உடல் குறைபாட்டிற்காக கேலி பொருளாக்கப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் தேசிய வாலிபால் வீராங்கனையான அருணிமா, கடந்த 2011-ம் ஆண்டு ரயிலில் செல்கையில் திருட்டு முயற்சி ஒன்றை தடுக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டார். இதில் அவரது காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக முழங்காலுக்கு கீழ் ஒரு காலானது அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது.  ஒரு கால் போனாலும் மனதளவில் ஊனமடையாத அருணிமா, செயற்கை காலை பொருத்திக் கொண்டு உலகின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். செயற்கை காலுடன் முதலில் எவரெஸ்ட்டில் ஏறிய நபர் எனும் பெருமையை அருணிமா பெற்றார்.

மாற்று திறனாளிகள் பலருக்கு முன்மாதிரியாக விளங்கும் பூர்ணிமாவுக்கு நேற்று கோவில் ஒன்றில் நடைபெற்ற எதிர்பாரா சம்பவம் மிகுந்த மனவேதனையை தந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மஹாகாளீஸ்வரர் கோவிலுக்கு நேற்று முன்தினம் அவர் சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் இரண்டு முறை அவரை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அவர்களுடன் சண்டை போட்ட அருணிமா ஒரு கட்டத்தில் அழுதுள்ளார். அவரது உடல் குறைபாட்டை அடையாளப்படுத்தி அதிகாரிகள் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில் அருணிமா, "எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் போது விட உஜ்ஜைன் கோவிலில் அதிக வலியை அனுபவித்தேன். எனது உடல் குறைப்பாட்டை அங்கு கேலி செய்தனர்" என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய உஜ்ஜைன் கோவில் நிர்வாக அதிகாரி ஒருவர், பூர்ணிமாவுக்கு நடைபெற்ற சம்பவம் குறித்து செய்திகள் மூலமே தெரிந்து கொண்டேன். அவர் காவல் நிலையத்திலோ, கோவில் நிர்வாகத்திடமோ புகார் அளிக்கவில்லை. கோவிலில் மாற்று திறனாளிகளுக்கான பாதை உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வருகிறோம் என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close