நடிகர் ரஜினிகாந்தை சந்திக்கிறார் தோனி!

  முத்துமாரி   | Last Modified : 19 Jan, 2018 01:09 pm


சென்னைக்கு வந்துள்ள 'கேப்டன் கூல்' மகேந்திர சிங் தோனி இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக  களமிறங்க இருப்பது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரான சீனிவாசனின் 'இந்தியா சிமெண்ட்ஸ்' நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்க தோனி இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தோனி, "சென்னை அணிக்கு மீண்டும் திரும்பியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 

சென்னை எனக்கு 2வது வீடு. சென்னை அணி எனக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. டெஸ்ட் போட்டியில் சென்னையில் தான் நான் அதிக ஸ்கோரை பதிவு செய்தேன். தொடர்ந்து நான்  விக்கெட் கீப்பராக இருப்பது அணியை வழிநடத்த உதவும். ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை அணியில் சேர்க்க முயற்சி செய்வோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வினை ஏலத்தில் எடுப்போம். சென்னை அணிக்கு 2 ஆண்டுகள் விளையாட முடியாதது வருத்தம் அளித்தாலும் இந்த 2 ஆண்டுகளில் நிறைய விஷயங்களை புரிந்துகொள்ள முடிந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவு ஆகிய இரண்டும் தான் இந்த அணிக்கு மிகப்பெரிய பலம். மேலும் இந்த அணியில் உள்ள அனைத்து வீரர்களும் எப்போதும் தங்களது முழுத்திறமையை வெளிப்படுத்துவர். சென்னை அணி மீதான எதிர்ப்பார்ப்பினால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி சிறப்பாக நடைபெறும்" என பேசியுள்ளார்.

இதனையடுத்து இன்று இரவு 9 மணிக்கு நடிகர் ரஜினிகாந்தை தோனி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் பிரவேசத்தில் ஈடுபட்ட பிறகு நடிகர் ரஜினியை தோனி முதல்முறையாக சந்திக்க இருக்கிறார். எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close