கணவரின் தவறுக்கு நானே காரணம்- வார்னரின் மனைவி உருக்கமான தகவல்கள்

  Padmapriya   | Last Modified : 01 Apr, 2018 07:43 pm

பந்தை சேதப்படுத்தியதால் 12 மாதங்கள் தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் செயலுக்கு தானே காரணம் என்று அவரின் மனைவி கேன்டிஸ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சில புதிய தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப் ஆகியோர் சிக்கினார்கள். இதில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித்துக்கு 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் முக்கிய நபர் தான் டேவிட் வார்னர். அடுத்த ஆண்டில் வரவிருக்கும் சர்வதேச, உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. இதனை அடுத்து சிட்னி வந்தடைந்த வார்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, வார்னர் தனது தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்கிறேன். ஆஸ்திரேலிய மக்களுக்கும், ரசிகர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேன் என்று கண்ணீருடன் வார்னர் மன்னிப்பு கேட்டார். அதுமட்டுமல்லாமல், இனிமேல் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடமாட்டேன் என்றும் கூறினார்.

இதைக் கூறும்போது அருகிலிருந்த அவரது மனைவி கேன்டிஸ் கண்ணீர் விட்டார் அழ ஆரம்பித்தார். பின்னர் கேன்டிஸ் வார்னர், ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் சண்டே டெலிகிராப் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், "பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் என் கணவர் சிக்கியதற்கும், அந்த தவறைச் செய்ததற்கும் நான்தான் காரணம். அந்த குற்ற உணர்ச்சி என்னை கொல்கிறது. அவை அனைத்துக்கும் நானே காரணம். எனது கணவரின் செயலுக்கு நான் மன்னிப்புக் கோரவில்லை. அவரை மன்னித்துவிடுங்கள் என்றும் கேட்கவில்லை. ஆனால், என் மீதும், என் குழந்தைகள் மீதும் விழுந்த அவதூறு பேச்சுக்களுக்கு பதிலடி கொடுக்கவே அவ்வாறு அவர் செய்துவிட்டார். எனது கணவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பாதியிலேயே திரும்பி வீட்டுக்கு வந்தபோது, படுக்கை அறையில் என் முன் கண்ணீர் விட்டு அழுவதைப் பார்த்து நானும், எனது குழந்தைகளும் வேதனை அடைந்தோம். அவரின் அழுகை என் இதயத்தை நொறுக்கிவிட்டது. நாங்கள் கேப்டவுன் டெஸ்ட் போட்டியைப் பார்க்கச் சென்றிருந்தபோது, என்னுடைய முன்னாள் காதலரின் முகம் வரையப்பட்ட முகமூடியை மாட்டிக்கொண்டு ரசிகர்கள் என்னை கீழ்த்தரமாக கிண்டல் செய்தனர். என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர், என்னை பாட்டுப்பாடி கிண்டல் செய்தனர். ஆனால், அதை எல்லாம் நான் பொறுமையாகவே கேட்டுக்கொண்டிருந்தேன். எனது கணவர் தான் செய்த தவறுக்கு நிச்சயமாக வருந்துவார். அதே சமயம், ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் இருந்து பொறுமையையும், வார்னர் மீது இரக்கமும் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

தென் ஆப்பிரிக்க ரசிகர்களின் செயல்பாடுகள் தான் காரணமா? டேவிட் வார்னரின் மனைவி கேண்டிஸ் ஒரு பாப் பாடகி. கறுப்பின ரக்பி விளையாட்டு வீரர் சோனி பில் வில்லியம்ஸுக்கும் கேண்டிஸுக்கும் ஏற்கெனவே காதல் இருந்தது. கடந்த 2007-ம் ஆண்டு வரை இருவருக்கும் இடையே நெருங்கிய உறவும் இருந்தது. பின், சில பிரச்சினைகள் காரணமாக இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது, அதன்பின் வார்னரை கேன்டிஸ் திருமணம் செய்து கொண்டார். 2-வது டெஸ்ட் போட்டி நடக்கையில், வார்னருக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டிகாக்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஓய்வறையில் வார்னரின் மனைவி குறித்து டீகாக் அவதூறாக பேசியதால், டீகாக்கை அடிப்பதற்கு வார்னர் சென்றதாக கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியும் இருந்தது. கேன்டிஸின் நடத்தை குறித்தும் டீகாக் விமர்சித்திருந்தார். அதனால்தான் அப்போது ஆவேசமாக நடந்து கொண்டதாக வார்னரும் ஏற்கெனவே தெரிவித்தார். இந்த சம்பவத்தை அடுத்து, தென்ஆப்பிரிக்க ரசிகர்கள் சிலர் கூட வார்னரை அவமானப்படுத்தும் நோக்கில், அவரின் மனைவியின் முன்னாள் காதலரும் ரக்பி வீரருமான வில்லியம்ஸின் முகமூடியை அணிந்து ஆடு களத்தில் கிண்டல் செயலில் ஈடுபட்டனர். இதனால் வார்னர் மன உளைச்சலுக்கு ஆளானார். களத்தில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த வார்னரின் மனைவி கேன்டிஸ் மனதையும் இது பாதித்தது. இந்த விவகாரத்தின் காரணமாக, தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் பந்தைச் சேதப்படுத்தும் திட்டத்தை வார்னர் செயல்படுத்தி இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close