2017: விளையாட்டு உலகின் சாதனைகளும் சவால்களும்!

  நந்தினி   | Last Modified : 30 Dec, 2017 02:09 pm

ஒருமுறை விழு பத்துமுறை எழு என்று யாரும் பேச்சுக்கு சொல்வதில்லை.. விளையாட்டுத் துறையில் வீரர்களிடம் அப்படிப்பட்ட ஒரு மனப்பான்மையை தான் நாம் பார்க்கிறோம். ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தால் அடுத்த ஆட்டத்தில் அவர்கள் எழுச்சி பெற்று செய்யும் சாதனைகள் சிலிர்க்க வைக்கும். விளையாட்டு போட்டிகளில் உலகளவில், இந்த ஆண்டு நிகழ்ந்த சாதனைகள், சவால்கள் என்ன என்பதை கீழே பார்க்கலாம்...

செரீனா வில்லியம்ஸ்: இந்த ஆண்டின் துவக்கத்தில் பெரிதும் பாராட்டப்பட்ட ஒரு பெண்மணி. டென்னிஸ் உலகில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் நீடித்து வந்த வீராங்கனை. கறுப்பினம் என்ற எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி சாதனைகள் மூலம் பதிலடி கொடுத்தவர். பல சாதனைகளை புரிந்த இவர், இவ்வருடம் மிகவும் மதிக்கத்தக்க ஒருவரானார். ஆண்டின் துவக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில், வயிற்றில் சிசுவுடன் களம் கண்டு, பட்டத்தையும் வென்றார். இதன் பிறகு, டென்னிஸ் போட்டியில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். அவர் விலகியதற்கு பின், முதலிடத்தில் வீராங்கனைகள் மாறி மாறி இடம் பிடித்து வந்தனர். செப்டம்பர் மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்த செரீனா, நவம்பர் மாதம் காதலனை கைப்பிடித்தார். தற்போது மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்ப தயாராகிவிட்டார் செரீனா வில்லியம்ஸ். அவர் நம்பர் ஒன் இடத்திற்கு திரும்புவாரா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு. அது மிகவும் சவாலானதாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

யு-17 கால்பந்து உலகக் கோப்பை: 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி, முதன்முறையாக இந்தியாவில் இந்த வருடம் நடைபெற்றது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) நடத்தும் போட்டிகளில், இந்தியா கலந்து கொண்ட முதல் போட்டி இது என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. ஏனென்றால், ஃபிபா போட்டிகளில் ஒன்றில் பங்கேற்க வேண்டுமென்பதே ஒரு சாதனையாக கருதப்பட்டது. இதனால், மிகவும் முக்கியத்துவம் பெற்ற இப்போட்டியை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். ஆனால், இப்போட்டியின் லீக் சுற்றுகளுடன் இந்தியா வெளியேறியது. எனினும், கடைசி வரை போராடிய இந்திய அணி, ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றுவிட்டது. இனி அடுத்த போட்டிக்காக இந்தியா ஆயுத்தமாக வேண்டியது அவசியம்.

ரஷ்ய வீரர்களுக்கு தடை: கடந்த 2014ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் 2016ல் ரியோ ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. பின் அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்ற சிலர் மட்டும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கொடியின் கீழ் போட்டியிட்டனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்க இருக்கிறது. இப்போட்டியில் ரஷ்யர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படுவதா? வேண்டாமா? என்று முடிவெடுக்க கூட்டம் இந்தாண்டு இறுதியில் நடைபெற்றது. அதில், ஒட்டுமொத்த ரஷ்ய அணிக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஊக்கமருந்து சோதனையில் தேர்ச்சி பெரும் வீரர்கள் மட்டும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கொடியின் கீழ் விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், துவக்க விழாவில் ரஷ்ய அணிவகுப்பு நடக்காது என்றும், பதக்கம் வென்றாலும் தேசிய கீதம் இசைக்கப்படாது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. தவிர, எதிர்காலத்தில் ரஷ்ய நட்சத்திரங்களுக்கான ஊக்கமருந்து சோதனை பணிக்காக ரூ.96.52 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ரஷ்யாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும், இதனை சவாலாக எடுத்துக் கொண்டு களத்தில் ஜெயிக்க ரஷ்யா கடுமையாக உழைக்கும்.

ஹாக்கி ஆசிய கோப்பை: கடந்த அக்டோபர் மாதம் டாக்காவில் ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில், இறுதிப் போட்டியில் இந்திய அணி, வலுவான மலேஷிய அணியுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில், இந்தியா இரண்டு கோல்கள் அடித்தது. மலேஷியா ஒரு கோலும் போடவில்லை. இதையடுத்து இரண்டாவது பாதியில் மலேஷியா ஒரு கோல் போட்டது. அதற்கு பின், மேலும் ஒரு கோலடிக்க மலேஷியா கடுமையாக முயற்சி செய்தது. ஆனால், இந்திய அணி, அந்த முயற்சிகளை தவிடு பொடியாக்கி, கடைசி வரை கோல் அடிக்கவிடாமல் தடுத்தது. இதனால், 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம், 10 ஆண்டுகள் கழித்து ஆசிய கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது.

ஸ்ரீகாந்த் கிடாம்பி: இந்த வருடம் ஸ்ரீகாந்துக்கானது என்றே சொல்ல வேண்டும். மொத்தம் நான்கு சூப்பர்சீரிஸ் பட்டங்களை வென்று ஸ்ரீகாந்த் அசத்தினார். இந்தோனேஷியா, டென்மார்க், ஆஸ்திரேலியா, பிரெஞ்சு ஓபன் ஆகிய பட்டங்களை அவர் வென்றார். ஒரு ஆண்டில் இதனை பட்டங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரீகாந்த் பெற்றார். மேலும், தரவரிசையில் 2ம் இடத்திற்கு முன்னேறினார். இதையடுத்து நடந்த தேசிய விளையாட்டில் தோல்வி அடைந்தார். இதன் பின் நடந்த சில போட்டிகளில் பங்கேற்காத ஸ்ரீகாந்த், தரவரிசையில் சரிவை சந்தித்தார். தற்போது, மீண்டும் போட்டியில் பங்கேற்று வருகிறார்.

ரோஜர் பெடரர்: தலைச்சிறந்த டென்னிஸ் வீரர்களுள் ஒருவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரருக்கு, இந்த ஆண்டு மறக்கமுடியாததாக அமைந்துள்ளது. இவ்வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன், விம்பிள்டன் ஓபன் ஆகிய கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார். இதன் மூலம், விம்பிள்டனில் 8 பட்டங்களை வென்று, அதிக விம்பிள்டன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெடரர் பெற்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 19 பட்டங்களை பெடரர் பெற்றுள்ளார். 2012ம் ஆண்டுக்கு பிறகு பெடரர், இந்த ஆண்டு தான் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். இந்த இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில், அவரது ஆட்டம் மிகவும் விமர்சிக்கப்பட்டது. அவரது டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கூறினர். ஆனால், அவர் மீண்டும் எழுச்சி பெற்று பட்டங்களை வென்று அசத்தியது, அனைவரிடத்திலும் வாயை பிளக்கச் செய்தது. இனி மற்ற போட்டியாளர்களுக்கு கடும் சவாலாகவே பெடரர் இருப்பார்.

கிறிஸ் கெய்ல்: பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டியில், ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல், பைனல் போட்டியில் தனது அணியை கோப்பையை தட்டிச் செல்ல உதவினார். அவரின் அந்த அதிரடி ஆட்டம், மிகப்பெரியளவில் பேசப்பட்டது. அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன கெய்ல், 69 பந்துகளில் 146 ரன் குவித்தார். அதோடு, 18 சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். ஒரே போட்டியில் இதனை சிக்ஸர்களை யாரும் பறக்கவிட்டது கிடையாது. தவிர, டி20 போட்டிகளில் 20 சதங்களை பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், டி20-களில் 11,000 ரன்களை கடந்த முதல் வீரரும் கெய்ல் ஆவார். களத்தில் கெய்ல் இருந்தாலே மற்ற அணிக்கு கடும் நெருக்கடி தான்.

விஸ்வநாதன் ஆனந்த்: செஸ் கிராண்ட்மாஸ்டர் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், ஆண்டை உலக கோப்பையுடன் முடித்தார். 48 வயதான ஆனந்த், உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், நோர்வேவின் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார். 2013ம் ஆண்டு சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், கார்ல்சனிடம் விஸ்வநாதன் தோல்வி அடைந்தார். நான்கு ஆண்டுகள் கழித்து, அந்த தோல்விக்கு ஆனந்த் பதிலடி கொடுத்திருப்பது ரசிகர்கள் இடையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, செஸ் சாம்பியனாகி உள்ள ஆனந்துக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. ஆனந்தின் மோசமான பார்ம் காரணமாக, அவர் ஓய்வு பெற வேண்டுமென்ற விமர்சனங்கள் எழுந்தன. இதற்கெல்லாம், விஸ்வநாதன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ரோஹித் சர்மா: இந்த ஆண்டு கிரிக்கெட் உலகில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்ட விஷயங்களில் ரோஹித் சர்மாவும் முக்கிய பங்கு வகிப்பார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். 13 பவுண்டரி, 12 சிக்ஸர்கள் உள்பட 208 ரன் அடித்து துவம்சம் செய்தார். இது தவிர, அந்த அணிக்கு எதிராக டி20 போட்டியில், அதிவிரைவாக சதமடித்து டேவிட் மில்லரின் சாதனையை முறியடித்தார். 35 பந்தில் ரோஹித் சதமடித்திருந்தார். மில்லர் 36 பந்தில் வங்கதேசத்திற்கு எதிராக அதிவிரைவாக சதத்தை விளாசியிருந்தார். இதனால், மற்ற வீரர்களுக்கு கடும் போட்டியாளராக திகழ்கிறார் ரோஹித்.

உசைன் போல்ட் ஓய்வு: 8 ஒலிம்பிக் பதக்கம், 11 உலக சாம்பியன்ஷிப் பதக்கம் என ஓட்டப்பந்தய களத்தை சுமார் 10 ஆண்டுகாலம் ஆண்டு வந்த சகாப்தம் 2017 உடன் நிறைவு பெற்றது. 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் 9.95-களில் இலக்கை அடைந்து சாதனை படைத்த அதே மைதானத்தில், இந்த ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்துடன் விடைபெற்றார் உசைன் போல்டின். இவரது ஓய்வு நாளில் மட்டும் எப்போதும் இல்லாத அளவிற்கு மைதானத்தில் கூட்டம் அலைமோதியது, அதுவே முதல்முறை. மின்னல் மனிதனின் ஓய்வு உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவரது கடின உழைப்பு, சாதனை, ஆகியவற்றால் நாட்டிற்கு பெரிதும் பெருமை சேர்த்த மனிதனுக்காக தலைவணங்குவோம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close