காமன்வெல்த் போட்டிக்காக பயிற்சி எடுத்து வரும் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
வருகிற ஏப்ரல் மாதம் 5ம் தேதி காமன்வெல்த் போட்டிகள் தொடங்க இருக்கிறது. இதில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டிகள் ஏப்ரல் 11ந் தேதியில் இருந்து துவங்க உள்ளது. இதற்காக இந்திய தரப்பில் இருந்து வீரர்- வீராங்கனைகள் தயாராக வருகின்றன. போட்டியில் தேசிய கொடியை ஏந்திச் செல்ல இருக்கும் பி.வி. சிந்துவும் போட்டிக்காக தயாராக பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டு வருகிறார்.
நேற்றைய பயிற்சியின் போது சிந்துவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். இதனால், காமன்வெல்த் போட்டிகளில் அவர் பங்கேற்பதற்காக சூழ்நிலை கடினமாகிவிடுமோ என்று பயிற்சியாளர் உட்பட அனைவரும் அச்சமடைந்தனர். காயத்தினால் அவதிப்பட்ட அவருக்கு பிசியோ காயத்ரி, உடனடியாக ஐஸ் பேக் வைத்தார். ஆனால், வலியை பொறுக்க முடியாமல் சிந்து அழுதுள்ளார்.
இதற்கு பின், காயத்தில் இருந்து விடுபட்டதாகவும் விரைவில் பயிற்சியை தொடர்வேன் என்றும் சிந்து கூறினார். இதனால் பயப்படும் படியான காயம் ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இன்று ஓய்வு எடுக்கும் அவர், நாளை முதல் பயிற்சியை தொடர்வார் என்று தெரிகிறது.
காமன்வெல்த் போட்டியில் சாய்னா நேவால், 2010ல் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். சிந்து, 2014ம் ஆண்டு வெண்கலம் வென்றிருந்தார். "ஏப்ரல் 1ம் தேதி போட்டிக்காக கிளம்புகிறேன். போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, இந்த முறை நான் வெற்றி பெற வேண்டும்" என்று சிந்து தெரிவித்தார்.