"தோனிக்காக ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும்": ரெய்னா உருக்கம்!

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 02:56 pm


கேப்டன் தோனிக்காக ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். 

11-வது ஐ.பி.எல் சீசன் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மிகவும் பரபரப்பான நிலையில் இருக்கும் 2018 ஐ.பி.எல் போட்டியில் எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்ற படபடப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்த சீசன் போட்டியை யார் மிகவும் பெரிதாக பார்க்கிறார்களோ இல்லையோ சென்னை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 

இரண்டு ஆண்டு தடையினால் மிகவும் ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு, இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் வரவால் புத்துணர்வு கிடைத்துள்ளது. மேலும், கோப்பையை சென்னை வெல்ல வேண்டும் என்ற ஆர்வமும், தவிப்பும் அதிகமாக இருக்கிறது. இதை போட்டியாக மட்டும் பார்க்காமல் சென்னை ரசிகர்கள் தங்களது உணர்வாக பார்க்கின்றனர். 


இதுவரை 12 போட்டிகளை எதிர்கொண்டுள்ள சென்னை அணி, 8ல் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட பிளே-ஆப் சுற்றை நெருங்கிவிட்ட சி.எஸ்.கே அணியின் கேப்டனுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார் சுரேஷ் ரெய்னா. 

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "ஐ.பி.எல் தொடங்குவதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கூட்டம் நடைபெற்றது. அப்போது எம்.எஸ். தோனி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். சென்னைக்காக அவர் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்கிறார். நாங்கள் அனைவரும் அதை செய்கிறோம். 2008ம் ஆண்டில் இருந்து சி.எஸ்.கே-வுக்காக தோனி இருப்பது அற்புதமான விஷயம். சுற்றி இருக்கும் மிகச்சிறந்த தோழர்களில் ஒருவர் தோனி. இந்த முறை தோனிக்காக ஐ.பி.எல் கோப்பையை நாங்கள் வெல்ல வேண்டும். 

தோனி கடும் விமர்சனங்களை பலமுறை சந்தித்துள்ளார். அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் அவரின் சிறந்த ஆட்டமே பதிலடியாக இருந்துள்ளது. இதை நாம் உணர்ச்சிப்பூர்வமாக பார்க்கவேண்டும். தோனிக்காக கோப்பையை வெல்லும் அணி எங்களிடம் தற்போது உள்ளது. அவருக்காக இதை செய்தாக வேண்டும். கடவுளின் ஆசிர்வாதத்தால், இந்த முறை ஃபைனலில் வெற்றி பெற வேண்டும். 2011ம் ஆண்டுக்கு பிறகு அதை நாங்கள் செய்யவில்லை என்பதால், இதை கண்டிப்பாக இப்போது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.


பிளே-ஆஃப் சுற்றுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அது கடினமான போட்டியாக இருக்கும் என்றாலும், எங்கள் அணி நம்பிக்கையுடன் இருக்கிறது. எங்கள் அணி இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டது. துவக்க வீரர்களாக வாட்சன், ராயுடு கலக்குகிறார்கள். அவர்களை தொடர்ந்து நான், தோனி மற்றும் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். எங்களுக்கு பொழுதுபோக்காக டி.ஜே. பிராவோ இருக்கிறார். பாஜி (ஹர்பஜன்) எங்களை ஊக்கப்படுத்துவார். அணியில் அனுபவமிக்க வீரர்கள் இருக்கின்றனர். அவர்கள் பல போட்டிகளை வென்று கொடுத்தவர்கள். 

ஐ.பி.எல் ஏலத்துக்கு பிறகு, அணியில் வயதானவர்கள் இடம் பெற்றுள்ளதாக விமர்சனம் செய்திருந்ததை படித்தேன். ஆனால், இது அனுபவம் பற்றியது. இதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. 

எங்களிடம் அதே அணி, அதே மருத்துவர்கள், அதே ஃபிசியோ, அதே ட்ரைனர்கள் உள்ளனர். முக்கியமாக அணியில் முன்னர் பேட் செய்த வீரர், பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி இருக்கிறார். அவருடைய பங்களிப்பு அற்புதம். முக்கியமாக என்னுடைய விஷயத்தில். உங்களை சரி செய்ய உங்களுக்கு ஒருவர் தேவைப்படுவார். அந்த வேலைக்கு ஹஸ்ஸி ஒரு சிறந்த மனிதராக எங்கள் அணிக்கு கிடைத்துள்ளார். 


என்னை தவிர தோனியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஐ.பி.எல் தருணங்களை அனுபவித்து வருகிறார். எங்களுடைய குடும்பம் எங்களுடனே பயணிக்கிறது. எங்கள் மகள்களும் எங்களுடன் இருக்கிறார்கள். ஹினாயா, ஸிவா, கிரேசியா, இம்ரான் தாஹிரின் மகன் அனைவரும் ஒன்றாக விளையாட, மனைவிகள் ஒன்றாக ஷாப்பிங் செய்ய, நாங்கள் ஒன்றாக பழைய நினைவுகள் பற்றி பேசி மகிழ்ந்து வருகிறோம். இதனால் தான் ஐ.பி.எல் ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது. இது ஒரு விழாக்காலம் போல எங்களுக்கு" என்று உணர்ச்சி பொங்கவும் உற்சாகமாகவும் பேசி முடித்துள்ளார் ரெய்னா. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close