சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார்.
பிரான்ஸில் சாட்டெவில்லே தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதலில் பிரபல இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 85.17மீ தூரத்திற்கு எறிந்து முதலிடத்தை பிடித்தார். மால்டோவாவின் அன்றியான் மர்டாரே 81.48மீ தூரத்திற்கு எறிந்து 2-வது இடத்தை பிடித்தார். லிதுவேனியாவின் ஏடிஸ் மட்டுசெவியஸ் (79.31மீ) வெண்கலப் பதக்கம் பெற்றார்.
2012 ஒலிம்பிக் சாம்பியனான கேஷாரன் வால்கோட், 78.26மீ தூரம் எறிந்து போடியத்தில் 5-வது இடத்தை பிடித்தது ஏமாற்றம் அளித்தது.
முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், நீரஜ் சோப்ரா 86.47மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் ஈட்டி எறிதல் வீரர் என்ற சாதனையை நீரஜ் படைத்தார்.
Neeraj Chopra 🇮🇳 takes the win with this 85.17m at Meeting International Sotteville Les Rouen. #trackandfield #athletics #Keihäänheitto @JustSportsTweet @ThrowsChat @TnFjunkie pic.twitter.com/hJHUEuqUzL
— Miska (@M1ZKA) July 17, 2018
20 வயதான நீரஜ், 2016ல் முதன்முறையாக ஜூனியர் போட்டியில் உலக சாதனை படைத்து அனைவரது கவனத்தையும் பெற்றார். யு-20 சாம்பியன்ஷிப் போட்டியில் 86.48மீ தூரத்தில் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். அதே ஆண்டு, ரியோ ஒலிம்பிக் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.
தற்போது அடுத்த மாதம் இந்தோனேசியாவில் நடைபெற இருக்கும் ஆசிய போட்டியில், நீரஜ் சோப்ரா தனது திறமையை வெளிக்காட்ட உள்ளார்.