கிரிக்கெட் கடவுள் அவதரித்த நாள்! ட்ரெண்டிங்கில் #HappyBirthdayGod

  ஐஸ்வர்யா   | Last Modified : 24 Apr, 2018 11:22 am

கிரிக்கெட் கடவுளாக போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் 45-வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்களது அன்பை வெளிகாட்டும் வகையிலும், சச்சினின் புகழை போற்றும் வகையிலும், சச்சினின் சாதனைகளை நினைவுப்படுத்தும் வகையிலும் ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை #HappyBirthdayGod, #HappyBirthdaySachin என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் மற்றும் அணித் தலைவரான சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி பிறந்தார். தன்னுடைய 11 வயதில் கிரிக்கெட் பேட்டை கையில் எடுத்த மாஸ்டர் பிளாஸ்டர் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்காக விளையாடியதுடன், கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் போட்டி தொடரிலிருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள், 463 ஒருதினப் போட்டிகளில் 18,426 ரன்கள், சர்வதேசப் போட்டிகளில் 100 சதங்கள் என சச்சினின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

கிரிக்கெட் கடவுளாக வலம்வரும் சச்சினுக்கு அவர் விளையாட்டுத்துறையில் சாதித்த சாதனைக்காக அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. எத்தனையே கிரிக்கெட் வீரர்களுக்கு சச்சின் ஒரு இன்ஸ்பிரேஷன் என்றும் அவருடைய இடத்தை பிடிக்க இந்த மண்ணுக்கு இன்னும் எவரும் வரவில்லை என்றே கூறலாம்.

கிரிக்கெட்டுக்காக தனது வாழ்வையே அர்பணித்த சச்சினின் திறமையை பாராட்டும் வகையில் மொனகனா மாவட்டம் அதார்வலியா என்ற கிராமத்தில் 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கோவில் அமைத்து சச்சின் சிலை எழுப்பப்படவுள்ளது.

1987ம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலாக நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டின்போது மைதானத்தில் பந்துகளை ஃபீல்ட் செய்து எடுத்துக் கொடுக்கும் 'பால் பாய்'-ஆக சச்சின் இருந்திருக்கிறார் என்றால் நம்பமுடியுமா? அதன்பின் தன் திறமையால் 1988ம் ஆண்டு பள்ளிகளுக்கு இடையிலான போட்டியிலும், 19 வயதில் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் ஆடிய முதல் வீரருமாக ஜொலித்துள்ளார். மேலும் 1992ம் ஆண்டு யார்க்ஷயர் அணி ஒப்பந்தம் செய்த முதல் அயல்நாட்டு ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1989 நவம்பர் 15ல் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய சச்சின், 2013 நவம்பர் 14ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடினார். சச்சினை பலருக்கு பிடிக்கும், ஆனால் அவருக்கு பிடித்தமான ஸ்போர்ட்ஸ் வீரர், டென்னிஸ் லெஜெண்ட் ஜான் மெக்கன்ரோ.

தொடக்கத்தில் மைதானத்தில் விளையாடியபோது ‘பொடியன்’ என பெயர் வாங்கிய சாதனை நாயகன் தொடர்ந்து 24 ஆண்டுகளாக விளையாடி டெஸ்ட் போட்டியில் 13 முறையும், ஒருநாள் போட்டியில் 60 முறையும் ஆட்ட நாயகன் விருதுகளை அள்ளியுள்ளார்.

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சச்சின், மாநிலங்களவை நியமன உறுப்பினராக 2012-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராக ஆறு ஆண்டு காலம் களத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கர், மொத்த ஊதியமான 90 லட்ச ரூபாயை தேசிய நல நிதியகத்தில் திருப்பிக் கொடுத்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.

‘பிளேயிங் இட் மை வே’ என்ற சுயசரிதை நூலையும் வெளியிட்டுள்ளார். சச்சினின் சுயசரிதைப் புத்தகமான 'பிளேயிங் இட் மை வே' விற்பனையில் சாதனை படைத்து லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சேர்க்கப்பட்டுள்ளது. பிளேயிங் இட் மை வே புத்தகம் வெளியீட்டுக்கு முன்பே 1 லட்சத்து 50 ஆயிரம் பிரதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close