கோலி Vs தோனி: யார் சிறந்த கேப்டன்?

  Newstm Desk   | Last Modified : 26 Apr, 2018 08:29 pm

2018 ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த சீசனில் தற்போது வரை அனைத்து போட்டிகளிலும் கடைசி ஓவர் வரை சென்று த்ரில் வெற்றியை பதிவு செய்து வருகிறது சிஎஸ்கே. ஆனால், ஆர்.சி.பி-யோ தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. 205 ரன் குவித்தும் வெற்றிபெற முடியாமல் போனது கோலியின் தலைமை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரியாக 10 நாட்களுக்கு முன்னர், பஞ்சாப் அணி மொகாலியில் நிர்ணயித்த இலக்கை தோனியால் எட்ட முடியவில்லை. கடைசி ஓவரில் 17 ரன் தேவைப்பட்ட நிலையில், தோனி, 79 ரன் அடித்து களத்தில் இருந்தும் பலனளிக்கவில்லை.

ஆனால், நேற்று பெங்களூரு அணிக்கு எதிராக தோனியின் மிரட்டல் அடி, அவருடைய ஸ்டைலில் போட்டியை முடித்து வைத்த விதம் என, மைதானமே பரபரப்பாகவும் ஆரவாரமும் இருந்தது. பெங்களூரு அணி நிர்ணயித்த 206 ரன் இலக்கை தோனி, ராயுடு இணைந்து எட்டினர். இருவரும் சேர்ந்தது 101 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் கொடுத்தனர்.

இதில், தோனி போட்டியை ஹெலிகாப்டர் ஷாட் அடித்து முடித்து வைத்தார். இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை சி.எஸ்.கே பிடித்தது. தோனி 34 பந்துகளில் 70 ரன் அடித்து (7 சிக்ஸர், ஒரு பவுண்டரி) ஆட்ட-நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்போட்டியில் 70 ரன் அடித்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக தோனி 5000 ரன்களை கடந்தார். டி20 கிரிக்கெட் கேப்டனாக 5000 ரன் மைல்கல்லை எட்டும் முதல் கேப்டன் சாதனையை தோனி படைத்துள்ளார். கவுதம் கம்பிர் 4242 ரன்களுடன் இரண்டாவது, விராட் கோலி 3591 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். தோனி, டி20 போட்டியில் மொத்தம் 5786 ரன் அடித்துள்ளார்.

இந்த ஐ.பி.எல் சீசனில் தோனி இரண்டு முறை அரை சதம் அடித்துள்ளார். 2013ம் ஆண்டுக்குப் பிறகு தோனி இரண்டுமுறை அரைசதம் அடிப்பது இதுவே முதல்முறை. தவிர, ஐ.பி.எல் இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் விளாசிய போட்டியும் இதுவே. பெங்களூருவுக்கு எதிராக 7 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

போட்டி நடந்த சின்னசாமி மைதானத்தில் மிகப்பெரிய வெற்றிகரமான ரன்-சேஸ் இது தான். ஐ.பி.எல் வரலாற்றில் ஐந்தாவது மிகப்பெரிய ரன்-சேஸாக இது அமைந்தது. 200க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி, சென்னை சூப்பர் கிங்ஸ் லீடிங்கில் உள்ளது. பொதுவாக தோனி எதிர்ப்பாளர்கள், அவரது வயதை காரணம் காட்டி, ஓய்வு பெற வேண்டும் என்று விமர்சனம் செய்வது வழக்கம். நேற்றையப் போட்டியில் வயது என்பது வெறும் நம்பர்தான் என்று தன்னுடைய ஆட்டத்தின் மூலம் நிரூபித்துவிட்டார் தோனி.

சென்னை - பெங்களூரு இடையேயான போட்டியில் 33 சிக்ஸர்கள் விளாசப்பட்டது. ஐ.பி.எல் வரலாற்றில் அதிக சிக்ஸர் அடிக்கப்பட்ட போட்டியாக இது உள்ளது.

சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணி, 32-வது முறையாக தோற்கடிப்பட்டுள்ளது. ஹோம் கிரவுண்டில் அதிக தோல்விகள் பெற்ற அணிகளில் டெல்லி 33 தோல்விகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதை விரைவில் ஆர்.சி.பி முந்திவிடுமோ என்ற கவலை தற்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. யாதவ், சஹால் என பார்மில் இருந்த பந்து வீச்சாளர்களை எல்லாம் முதலில் பந்து வீச செய்துவிட்டு, கடைசியில் இக்கட்டான சூழலில் பந்து வீச ஆள் இல்லாமல் ஆர்.சி.பி அவஸ்தைபட்டது. இது ஆர்.சி.பி நிர்வாகம் மற்றும் கோலியின் மீதான விமர்சனத்தை அதிகரித்துள்ளது.

இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக கோலி விளங்குகிறார். இது ஏதோ கோலியின் மேஜிக்கல் நடப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. ஆனால், நிஜமாகவே, கோலியிடம் தற்போது இருக்கும் இளம் வீரர்கள் தோனியிடம் இருந்தது கிடையாது. அசத்தலாக பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இந்தியா எத்தனை முறை வெளிநாடுகளில் படாத பாடு பட்டுள்ளது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இப்போதைய நிலையே வேற. புவனேஷ்வர் குமார், பும்ரா, உமேஷ் யாதவ் என பல வாய்ப்புகள்.

அதனால் தான் கோலியின் சாயம் ஐபிஎல்-லில் வெளுத்து விடுகிறதோ என்னவோ. அதற்காக தோனி செய்யாத தவறுகள் இல்லை. ஆனால், ஒரு கேப்டனாக எந்த நிலையிலும் முகம் சுழிக்காமல், மற்ற வீரர்களை நடத்தும் தோனியின் சுபாவம் இதற்கு ஒரு மிகப்பெரிய காரணம் எனலாம். பிட்சிலேயே அடிக்கடி தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் கோலி, முதலில் அதை மாற்ற வேண்டும்.

சரியான பவுலர்களை தேர்ந்தெடுக்க ஆர்சிபி நிர்வாகத்துக்கு அவர் நெருக்கடி கொடுக்க வேண்டும். எத்தனை காலம் தான் டி வில்லியர்ஸை நம்பி வண்டியை ஓட்டுவது? சென்னை கூட இந்த விஷயத்தில் நல்ல பாடத்தை கற்றுக்கொண்டு, இளம் இந்திய வீரர்கள், வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் என சாமர்த்தியமாக முதலீடு செய்துள்ளது. இதே ஆர்சிபி-யை தான் நாம் ஒவ்வொரு ஆண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதே பிரச்னைகள்; அதே தவறுகள்.

தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்துகொண்டால் மட்டுமே விராட் கோலியால் வெற்றிகரமான கேப்டனாக நீடிக்க முடியும் என்பதே நிதர்சனம்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close