ஐ.பி.எல்: எதிர்பார்ப்புக்கு வேட்டுவைத்த வீரர்கள்... வெற்றி பறிபோன கதை!

  பைரவா   | Last Modified : 30 Apr, 2018 06:59 pm

ஐ.பி.எல் 2008ல் தொடங்கியதில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில், சிறப்பான, த்ரில்லிங்கான, பலே என்று சொல்லும் அளவிற்கு சில போட்டிகள் நம்மை கவர்ந்துள்ளன. அதே போல், வீரர்களும் அடடே என ஆச்சரியப்படும் அளவுக்கு தங்களது சூப்பரான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். சூப்பராக செயல்படும் வீரர்கள் மத்தியில் மோசமாக செயல்பட்ட வீரர்களும் இருக்கின்றனர். தற்போது ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்..

ட்வயன் ஸ்மித்:

ஐ.பி.எல் போட்டிகளில் அதிக முறை இறுதிச் சுற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற அணி என்றால் அது சி.எஸ்.கே தான். 2015ம் ஆண்டு பல போராட்டங்களுக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை. டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பேட்டிங் செய்யும்படி மும்பையை அழைத்தது. களம் கண்ட மும்பை, அதிரடியாக ஆடி சென்னைக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இமாலய இலக்கை எதிர்கொள்ள சென்னை அணியின், துவக்க வீரர் ட்வயன் ஸ்மித் களமிறங்கினார். 48 பந்துகளை சந்தித்த அவர் எடுத்தது 57 ரன்தான்.

அதிரடியாக ஆட வேண்டிய நேரத்தில் ஸ்மித், ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற கணக்கில் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் மட்டுமில்லாமல் அணியில் அனைவருமே அடித்து விளையாடாமல் மெதுவாக ரன் சேர்த்து வந்தனர்.

12 முதல் 13 என்ற ரேட் வர வேண்டிய இடத்தில் 6-8 என்று இருந்தது. இதனால் இறுதிச் சுற்றை எட்டிய சென்னை அணியால், 161 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

அசோக் டிண்டா:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டு தடை வாங்கியதால், ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணி புதிதாக அறிமுகம் ஆனது. அந்த அணி அறிமுகமான சீசனில், புனே அணியில் வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா இடம் பெற்றிருந்தார். அந்த சீசனில் மும்பையுடன் மோதிய ஒரு ஆட்டத்தில், 4 ஓவரில் 63 ரன்களை வாரி வழங்க, மும்பை வெற்றியை உறுதி செய்தது. டிண்டாவின் பந்தில் ரோஹித் நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்டாது சிறப்பமசமாகும்.

இஷாந்த் சர்மா:

ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான எக்கனாமி ரேட்டை வைத்திருந்தவர் இஷாந்த். 2013ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பந்துவீசிய போது, 4 ஓவர்களில் 66 ரன்களை தாரைவாத்தார். அவரது ஓவரில் முரளி விஜய் மூன்று சிக்ஸர்களை விளாசினார். சுரேஷ் ரெய்னா, நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார். அன்று இஷாந்துக்கு சிறப்பான நாளாக அமையவில்லை.

ஸ்டீவ் ஸ்மித்:

2017 சீசனின் புனே அணியில் விளையாடினார். தொடக்க ஆட்டங்களில் புனே சரியாக விளையாடாததால், தோனியிடம் இருந்த கேப்டன் பொறுப்பு ஸ்டீவ் ஸ்மித்துக்கு கைமாறியது. அந்த அணியை சிறப்பாகவும் வழி நடத்திய ஸ்மித், இறுதிச் சுற்று வரை எட்ட வைத்தார். ஃபைனலில் புனே அணி, மும்பையை எதிர்கொண்டது. ஸ்மித்தின் திறமையான கேப்டன்ஷிப்பால், மும்பையை 129 ரன்களில் புனே சுருட்டியது.

இதன் பின் களமிறங்கிய புனே அணி வெற்றியின் விளிம்பிற்கு சென்றது. கடைசி ஓவரில் 11 ரன் தேவைப்பட்ட நிலையில், ஸ்மித் 50 பந்துகளில் 51 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆட வேண்டிய இடத்தில் ஸ்மித், அதிக பந்துகளை சந்தித்து குறைந்த ரன்களையே சேர்த்தார். இதனால் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷேன் வாட்சன்:

2016ம் ஆண்டு ஐ.பி.எல் இறுதிச் சுற்றில் பெங்களூரு - ஹைதராபாத் அணிகள் மோதின. வழக்கம் போல் ரன் சேஸிங்கில் கில்லியாக செயல்பட்டாலும் முடிவில் தோல்வியை தழுவியது விராட் கோலியின் பெங்களூரு அணி. ஆர்.சி.பி- அணியின் வாட்சன் தன்னுடைய பந்து வீச்சின் மூலம் பெங்களுருவின் வெற்றிக்கு வேட்டு வைத்தார். நான்கு ஓவரில் 61 ரன்களை அள்ளி கொடுத்ததில், ஹைதராபாத் வெற்றியை தட்டிப் பறித்துக் கொண்டது.

ரவிந்திர ஜடேஜா:

2018 சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துவக்கத்தில் அதிரடியாக விளையாடி இரண்டு வெற்றிகளை பெற்ற நிலையில், ஹாட்ரிக் அடிக்க முடியாமல் போனது துரதிஷ்டமே. மூன்றாவது லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணியை சந்தித்தது. 198 ரன் என்ற இலக்கை நோக்கி சென்னை பாய்ந்தது.

எப்போதும் கடைசி ஓவரில் வெற்றியை ருசிக்கும் சென்னை அணி, அந்த போட்டியிலும் கடைசி ஓவரில் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால், அன்றைய போட்டியில் கேப்டன் தோனியின் கணக்கு தவறாக போனது. பிராவோவுக்கு பதில் ஜடேஜாவை களமிறங்கினார்.

ஜடேஜா சென்ற ஆட்டத்தில் சிக்ஸ் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்ததால், அந்த ஆட்டத்திலும் அவர் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பந்தை தூக்கி விளாசாமல், உருட்டிவிட்டுக் கொண்டிருந்தார். என்னால் எவ்வளவு தான் சமாளிக்க முடியும் என்ற நிலையில் தோனி இருந்தார்.

79 ரன்களை அவர் அடித்தாலும், பார்ட்னர்ஷிப் தராமல் ஜடேஜா பல்பு கொடுத்தார். இதனால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அத்தனை கோடி கொடுத்து சி.எஸ்.கே-வால் தக்கவைத்துக் கொள்ளப்பட்ட ஜடேஜாவின் ஆட்டம் திருப்திகரமாக இல்லை என்பதே நிதர்சனம்.

கவுதம் கம்பிர்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைவிட்டதால், சொந்த ஊரான டெல்லி, கம்பிரை அணைத்துக் கொண்டது. சொந்த ஊர் அணிக்காக கோப்பையை வென்று கொடுக்கும் லட்சியத்தில் இருந்த கம்பிருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இவரது தலைமையில் களமிறங்கிய டெல்லி அணி, ஆறு போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றது.

தவிர, கம்பிரின் ஆட்டமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால் கவலையடைந்த கம்பிர் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகியதுடன், ஆடும் லெவனில் இருந்தே விலகினார். அதன் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பில் விளையாடிய டெல்லி முதல் வெற்றியை சாதித்தது.

ஹர்பஜன் சிங்:

இவர் ட்விட்டரில் விளையாடும் அளவிற்கு மைதானத்தில் விளையாடுவதில்லை என்பதே ரசிகர்ளின் வருத்தம். சென்னை ரசிகர்களை கவர தினமும் தமிழில் ட்வீட் செய்யும் ஹர்பஜன், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். ஜடேஜாவுக்கு அடுத்து ஆடும் லெவனில் ஹர்பஜன் சேர்க்கப்படுவது சரியென்று தோணவில்லை. அவரை தவிர அணியில் இடம் பெற்றிருக்கும் இளம் வீரர்களுக்கு ஹர்பஜன் வழிவிட்டால், அவர்களாவது வாய்ப்பு கிடைத்தால் போல் இருக்கும்.

யுவராஜ் சிங்:

மீண்டும் பஞ்சாப் அணிக்கே திரும்பியிருக்கும் யுவராஜ் இன்னும் தனது அதிரடியை காட்டாமல் இருக்கிறார். அவருடைய கிரிக்கெட் காலம் முடிந்துவிட்டது என்றே விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார். அவரும் 2019ம் ஆண்டுக்கு பின் ஓய்வு முடிவு குறித்து அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். அதுவரையாவது தனது சிறந்த ஷாட்களை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அவரது ஆட்டம் பெரியளவில் இல்லை என்பதே உண்மை.

கிரான் பொல்லார்ட்:

இவரை ரைட் டு மேட்ச் முறையில் மும்பை இந்தியன்ஸ் தக்கவைத்துக் கொண்டது. ஆனால், ஏன் தக்கவைத்துக் கொண்டது என்பதுபோல தான் இவரது ஆட்டம் உள்ளது. சரியான ஃபார்மில் இல்லாத பொல்லார், எதிர்பார்த்த அளவிற்கு அதிரடி காட்டாமல் ஏமாற்றி வருகிறார். இவர் மும்பைக்கு தூணாக இருப்பார் என்று நினைத்தால் துயரமாக இருக்கிறார். ஆல்-ரவுண்டரான பொல்லார்ட் தொடர்ந்து சொதப்புவதால் மும்பை இந்தியன்ஸ் வருத்தத்தில் உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close