அவ்வளவு வாங்குனீங்களே... இவ்வளவுதான் அடிசீங்களா... ஐ.பி.எல் சொதப்பல் வீரர்கள்!

  நந்தினி   | Last Modified : 04 May, 2018 05:01 pm

கிரிக்கெட் போட்டியில் பெரியளவில் பணம் புரளும் இடம் என்றால் அது ஐ.பி.எல் தான். இப்போட்டியில் பங்கேற்றிருக்கும் ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களும், தங்களது அணியில் இடம் பெறும் வீரர்கள் பெரியளவில் சோபிப்பார்கள் என்று நினைத்து, அவர்களை கோடிகளைக் கொட்டி வாங்குகின்றனர். இந்த 11-வது சீசனில் பல கோடிகளை கொட்டி வாங்கிய டாப் வீரர்கள் எந்த அளவுக்கு ரன் குவித்துள்ளனர் அல்லது விக்கெட் வீழ்த்தினர் என்பதைப் பார்ப்போம்.

பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான் ராயல்ஸ்):

நம் எதிர்பார்ப்பு பட்டியலில் முதலில் இருப்பவர் இந்த வெளிநாட்டு இறக்குமதி, ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். கடந்த சீசனில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணி இவரை ரூ.14.5 கோடி கொடுத்து வாங்கியது.

அந்த அணிக்காக 12 போட்டிகளில் விளையாடிய ஸ்டோக்ஸ், 316 ரன் அடித்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 142.98 ஆக இருந்தது. இதில் ஒரு சதமும் அடங்கும். மேலும், 12 விக்கெட்கள் எடுத்தார். எக்கனாமி ரேட் 7.18. ஆனால், இந்த சீசனில் ஸ்டோக்ஸ் சோபிக்க தவறியுள்ளார்.

இந்த முறை பென் ஸ்டோக்ஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கைப்பற்றியது. இதற்காக அவர்கள் கொடுத்தது ரூ.12.5 கோடி. இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடிய ஸ்டோக்ஸ், எடுத்த மொத்த ரன் 147 தான். சராசரி 21, ஸ்ட்ரைக் ரேட் 123.52. அதிகபட்ச ஸ்கோர் 45.

இந்த ஆண்டு அவர் வெறும், நான்கு பவுண்டரி, ஐந்து சிக்ஸர்களை மட்டுமே பறக்கவிட்டுள்ளார்.

பேட்டிங்கில் சொதப்பிய அவர் பவுலிங்கிலும் சொதப்பி வருகிறார். ஒரே ஒரு விக்கெட் வீழ்த்திய, அவரது எக்கனாமி ரேட் 9.88. இனி வரும் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை ஸ்டோக்ஸ் வெளிப்படுத்துவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயதேவ் உனட்கட் (ராஜஸ்தான் ராயல்ஸ்):

ராஜஸ்தான் ராயல்ஸ் அதிக விலைக்கு வாங்கிய இரண்டாவது வீரர் இவர். வேகப்பந்து வீச்சாளரான உனட்கட், 2017 சீசனில் 24 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அவருடைய எக்கனாமி ரேட் 7.02. ஐ.பி.எல் தொடருக்கு பிறகு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உனட்கட், நிடாஹஸ் கோப்பையை பெற்று தந்ததில் முக்கிய பங்கு வகித்தார். அந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்த மூன்றாவது வீரர் உனட்கட் ஆவார்.

இப்படி ஜொலித்த உனட்கட், 2018 ஐ.பி.எல்-ல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ரூ.11.5 கோடிக்கு ராஜஸ்தான் அணிக்காக வாங்கப்பட்ட உனட்கட், 7 போட்டிகளில் வெறும் 4 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். எக்கனாமி ரேட் 10.18. இப்படியே சென்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முழுக்க படுத்துவிடும்.

மனிஷ் பாண்டே (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்):

ஹைதராபாத் அணிக்காக ரூ.11 கோடிக்கு வாங்கப்பட்ட இந்த திறமை மிக்க வீரரின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி அமையாதது துரதிஷ்டமே. இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடிய மனிஷ் பாண்டே, 158 ரன் மட்டுமே அடித்தார். சராசரி 26.33. ஸ்ட்ரைக் ரேட் 112.85. மனிஷ் ஒரு மேட்சில் 54 ரன்னும், மற்றொன்றில் 57 ரன்களும் எடுத்தார். அப்படி என்றால், மீதம் நடந்த 6 போட்டிகளில் அவர் எடுத்த ரன் வெறும் 46 தான். மோசமான ஃபார்மில் இருக்கும் பாண்டே விரைந்து செயல்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. இல்லை என்றால், ஐ.பி.எல் மட்டுமல்ல இந்திய அணியில் விளையாடுவது கூட கனவாகிவிடும்.

க்ளென் மேக்ஸ்வெல் (டெல்லி டேர்டெவில்ஸ்):

பிக் பாஷ் லீகில் அதிரடி காட்டி மிரட்டிய மேக்ஸ்வெல், பிரீமியர் லீகிலும் அதே வேகத்தை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிக் பாஷில் 9 போட்டிகளில் 299 ரன் அடித்து அசத்தியிருந்தார் மேக்ஸ்வெல். சராசரி 37.38. ஸ்ட்ரைக் ரேட் 154.12. இதை பார்த்து அசந்து போன டேர்டெவில்ஸ் நிர்வாகம் அவர் மீது பணத்தை வாரி இறைத்தது. ரூ.9 கோடிக்கு மேக்ஸ்வெல் வாங்கப்பட்டார்.

ஆனால், டெல்லி அணிக்காக ஏழு போட்டிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் 126 ரன் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 18. ஸ்ட்ரைக் ரேட் 159.49. ஆல்-ரவுண்டரான மேக்ஸ்வெல் நான்கு விக்கெட் எடுத்தார். எக்கனாமி ரேட் 7.22.

ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி பின்தங்கியிருக்கிறது. இந்த நேரத்தில் அதிரடி காட்டாமல் இருப்பது டெல்லிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு மேக்ஸ்வெல் செயல்படுவாரா என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரவிந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்):

இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சென்னை அணி மீண்டும் களமிறங்கியதால், அணி நிர்வாகம் மூன்று வீரர்களை தக்கவைத்துக் கொண்டது. அதில் முக்கிய வீரர்களாக தோனி, ரெய்னாவை அடுத்து ஜடேஜாவை ரூ.7 கோடிக்கு தக்கவைத்தது.

ஆனால், ஆல்-ரவுண்டரான ஜடேஜா பெரியளவில் தன்னுடைய ஆட்டத்தை வெளிக்காட்டவில்லை. பேட்டிங்கில், 8 இன்னிங்சில் ஜடேஜா 59 ரன் எடுத்தார். சராசரி 14.75. ஸ்ட்ரைக் ரேட் 115.69. கடைசியில்தான் இறங்கினார் என்றாலும், ஆட்டம் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை என்பதுதான் உண்மை.

பந்து வீச்சும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. 9 போட்டிகளில் அவர் மூன்று விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். எக்கனாமி ரேட் 8.56. சி.எஸ்.கே அணியில் மிகவும் எதிர்பார்ப்பு வைக்கப்பட்ட வீரர் ஜடேஜா. ஆனால், அவரது சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை என்பதே அனைவரது ஆதங்கமாக இருக்கிறது.

தவிர, போட்டியின் போது சிக்கலான நேரங்களில் சொதப்புவது ரசிகர்களிடையே எரிச்சலை உண்டாக்குகிறது. இதனால், இன்னும் ஏன் ஜடேஜாவை வைத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே, இந்திய அணியில் இருந்து ஜடேஜா ஒதுக்கப்பட்டுவிட்டார். அவருக்கும் இருக்கும் ஒரே வாய்ப்பு ஐ.பி.எல் தான். இதையும் ஜடேஜா மிஸ் செய்வது சரியா என்று அவரது ரசிகர்கள் கேட்கின்றனர். இதை ஜடேஜா சரி செய்வாரா?

க்ருனால் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்):

பிரபலமில்லாத வீரர்களில் மிகவும் விலையுயர்ந்த வீரர் க்ருனால் பாண்டியா. ஆல்-ரவுண்டரான க்ருனால் கடந்த ஆண்டு 13 போட்டிகளில் 243 ரன்கள் மற்றும் 10 விக்கெட் எடுத்தார். 2017 சீசனில் மும்பை கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் இந்த முறை 8 போட்டிகளில் 136 ரன், 8 விக்கெட் எடுத்துள்ளார். சராசரி 22.66. ஸ்ட்ரைக் ரேட் 137.37. எக்கனாமி ரேட் 7.04. 2018 சீசனில் பெரிதாக சோபிக்காத க்ருனாலை, மும்பை இந்தியன்ஸ் ரூ.8.8 கோடிக்கு, ரைட் டு மேட்ச் முறையை கொண்டு தக்கவைத்துக் கொண்டது.

ஆரோன் ஃபின்ச் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்):

ஆஸ்திரேலியா துவக்க வீரரான ஆரோன் ஃபின்ச்சை, பஞ்சாப் அணி ரூ.6.2 கோடி கொடுத்து வாங்கியது. இவர் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 6.00. ஸ்ட்ரைக் ரேட் 150.00. துவக்க வீரராக இருக்கும் ஃபின்ச், தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் இருப்பது அதிருப்தி அடைய வைக்கிறது.

மேலும் அவரது பேட்டிங் வரிசையும் நிலையாக இல்லை. 3 மற்றும் 5ல் இறங்குகிறார். இதுவும் அவரது மோசமான ஃபார்மிற்கு காரணமாக உள்ளது. பஞ்சாப் அணி எத்தனை நாளுக்கு தான் கிறிஸ் கெய்லையே நம்பி இருக்கும். மற்ற வீரர்களும் அணிக்காக விளையாடுவது அவசியமானது ஆகும்.

கே.எல்.ராகுல்/கிறிஸ் லின்:

வாங்கிய காசுக்கு உறுப்பிடியாக வேலை பார்த்த கெட்டிக்காரர்கள் இவர்கள் தான். இந்த சீசனில் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்த ராகுல், 7 இன்னிங்சில் 268 ரன் அடித்தார். சராசரி 38.29. ஸ்ட்ரைக் ரேட் 170.70 ஆக உள்ளது. இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ.11 கோடி கொடுத்து வாங்கியது.

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கிறிஸ் லின், கொல்கத்தா அணிக்காக ரூ.9.6 கொடுத்த வாங்கப்பட்டார். 9 இன்னிங்சில் லின், 260 ரன் எடுத்துள்ளார். சராசரி 32.50. ஸ்ட்ரைக் ரேட் 134.02.

ரஷீத் கான்/சஞ்சு சாம்சன்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரஷீத் கானை, ரைட் டு மேட்ச் முறையை பயன்படுத்தி அவரை தக்கவைத்துக் கொண்டது, அந்த அணிக்கு பெரிய பலமாக அமைந்தது. 8 போட்டிகளில் ரஷீத், 192 பந்துகள் வீசி, 232 ரன் கொடுத்து, 10 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். எக்கனாமி ரேட் 7.25.

ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சனை ரூ.8 கோடிக்கு வாங்கியது. ராஜஸ்தான் அணி விளையாடிய போட்டிகளில் இவரது ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. 8 இன்னிங்சில் 282 ரன் அடித்துள்ள சாம்சனின் சராசரி 40.29. ஸ்ட்ரைக் ரேட் 145.36.

கேதார் ஜாதவ்:

தடைக்கு பின் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய புள்ளியாக கருதப்பட்டவர் ஜாதவ். ரூ.7.8 கோடி கொடுத்து சி.எஸ்.கே அவரை வாங்கியது. சென்னை தனது துவக்க போட்டியில் மும்பையை எதிர்கொண்டது. அதில் காயம் ஏற்பட்ட போதிலும் விளையாடிய ஜாதவ், அப்போட்டியை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஆனால், காயத்தால் அவதிப்பட்ட அவர் ஐ.பி.எல் போட்டியில் இருந்து முற்றிலுமாக விலகினார். அவர் சி.எஸ்.கே அணிக்கு மிகப்பெரும் இழப்பாகும்.

டேவிட் வார்னர்/ஸ்டீவ் ஸ்மித்:

ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்றனர். இதனால் பிசிசிஐ-யும் அவர்களுக்கு, ஐ.பி.எல்-ல் விளையாட ஓராண்டு தடை விதித்தது. இதனால் இருவரும் இந்த சீசனில் பங்கேற்க முடியாத நிலை உருவானது. மேலும், இவ்விருவரும் ரூ.12.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது அவர்களுக்கு பெரிய இழப்பாக இது இருந்தாலும், ஓர் ஆண்டு காலம் போட்டியில் விளையாட முடியாதது அதைவிட பெரிய இழப்பாக அமைந்துவிட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close