ஃபெடரர் ஷாட்: டென்னிஸ் ரசிகர்கள் ஏமாற்றம்; கிரிக்கெட் ஆர்வலர்கள் வியப்பு!

  சிவசங்கரி கோமதி நாயகம்   | Last Modified : 13 Jul, 2018 12:56 pm
kevin-anderson-stuns-roger-federer-in-five-set-thriller

ஒன்பதாவது முறை விம்பிள்டன் பட்டத்தை வென்று சாதனை புரிவார் ரோஜர் ஃபெடரர் என்று டென்னிஸ் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தது. 

காலிறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசைப் பட்டியலில் 8-வது இடத்திலிருக்கும் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார் ரோஜர் ஃபெடரர். ரசிகர்கள் எதிர்பார்த்ததைப் போல் முதல் இரண்டு செட்களை தன் வசப்படுத்தினார் ரோஜர். மூன்றாவது செட்டிலும் அவர் கையே மேலோங்கி நின்றது. ரோஜருக்கு சாதகமாக ஒரு மேட்ச் பாயின்ட் வந்தவுடன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால், ஆண்டர்சன் அந்தத் தருணத்தில் சாதுர்யமாக ஆடி அந்த செட்டை தன் வசப்படுத்தித் தனக்கு விம்பிள்டனில் இன்னும் இடம் இருக்கிறது என்று நிரூபித்தார்.

ரசிகர்களும், விமர்சகர்களும் சற்றும் எதிர்பாராத நிகழ்வாக அது இருந்தது. எனினும், ரோஜெரின் கை மேலோங்கி இருந்ததால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். மூன்றாவது செட்டிற்கு பின்னர் ஆக்ரோஷமாக விளையாடிய ஆண்டர்சனை எந்த வகையிலும் நிறுத்த முடியவில்லை ரோஜரால். 

சற்றே நம்பிக்கை குறைந்து காணப்பட்ட ரோஜரை தன் சிறந்த சர்வீஸ் பலத்தால் எதிர்க்கொண்டு ஆண்டர்சன் தாக்கினார். மூன்று செட்களில் அழகாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தை 5 செட் வரை கொண்டு சென்று இறுதி செட்டை 13-11 வரை விளையாடி நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்தார் கெவின் ஆண்டர்சன்.

"நான் க்ளே கோர்ட்டில் விளையாடுவதை விட க்ராஸ் கோர்ட்டில் விளையாடுவதையே விரும்புகிறேன். மேலும் எனக்கு 35 வயதாகி விட்டது. நான் விம்பிள்டன் விளையாட சிறிது எனர்ஜி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதால்தான் ஃபிரெஞ்ச் ஒபனில் கலந்துகொள்ளவில்லை" என்று சென்ற மாதம் ரோஜர் கூறியது ரசிகர்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காலிறுதியில் அவர் அதிர்ச்சித் தோல்வியடைந்தது டென்னிஸ் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே. 

டென்னிஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தாலும், கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ரோஜர் ஃபெடரர் என்றே சொல்ல வேண்டும். அட்ரியன் மன்னரினோ என்பவருடன் 4-வது சுற்று ஆட்டத்தில் ஃபெடரர் விளையாடியபோது கிரிக்கெட்டில் விளையாடும் ஃபார்வார்டு டிஃபென்சிவ் ஷாட் ஒன்றை விளையாடினார்.

விம்பிள்டன் குழு இவர் விளையாடிய இந்த ஷாட்டை பரிசீலிக்கும்படி இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சிலை (ICC) கேட்டுக்கொண்டது. ஐசிசி குழுவும் இவரது இந்த ஷாட்டை முதல் தரம் என்று விமர்சிக்கத் தவறவில்லை.

ஃபெடரரின் ரசிகரான சச்சின் டெண்டுல்கரும் இவரின் இந்த கிரிக்கெட் ஷாட்டை ரசித்து பேசினார். ரோஜரின் கண் - கை ஒருங்கிணைப்பு ஆச்சர்யம் அளிப்பதாகவும், அவர் 9-வது விம்பிள்டன் வென்று வந்த பின் கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் பற்றிய நுணுக்கங்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டார். அதற்கு ஃபெடரெரும் சச்சின் கூறும் நுணுக்கங்களை நான் விரைவில் குறிப்பு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார். இவர்களின் கருத்து பரிமாற்றங்களை "மேன்மக்கள் மேன்மக்களே" என்று ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளது. 

ஃபெடரரின் இந்த ஆண்டு விம்பிள்டன் கனவு நிறைவேறாமல் போனாலும் அனைத்து தரப்பு விளையாட்டு ரசிகர்களிடமும் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் என்பது விளங்குகிறது.

இந்த ஆண்டு விம்பிள்டன் நிறையவே ட்விஸ்ட்களை கொண்டதாக தான் விளங்கியுள்ளது. 2 காலிறுதி போட்டிகள் 5 மணி நேரம் நீடித்து இறுதிப் போட்டிகளைப் போல் காட்சி தந்தது. நடால் - ஜோகோவிச் போட்டியிடும் அரையிறுதிப் போட்டியும் ரசிகர்களுக்கு அறுசுவை விருந்துதான். ரோஜரைத் தோற்கடித்த உத்வேகத்தோடு இறுதி வரை விளையாடி தனது முதல் பட்டத்தை கைப்பற்றுகிறாரா சவுத் ஆப்ரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் என்பதை இந்த வாரம் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close