யுஏஇ-ல் விளையாடுவது பாகிஸ்தானுக்கு சாதகமா?

  நந்தினி   | Last Modified : 14 Sep, 2018 12:07 pm

pakistan-are-clear-favourites-to-lift-2018-asia-cup-in-uae

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தொடர் நடக்க இருக்கும் யுஏஇ-யை சொந்த மண்ணாக கொண்டு பல ஆண்டுகள் விளையாடி வரும் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா ஆதிக்கம் செலுத்துமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15ம் தேதி முதல் 28ந் தேதி வரை 2018ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்தியாவில் நடக்க இருந்த ஆசிய கோப்பை போட்டி, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவில் இருக்கும் பிரச்னை காரணமாக யுஏஇ-க்கு மாற்றப்பட்டது. இத்தொடரில் நடக்கும் 13 ஒருநாள் போட்டிகளில் இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்து போட்டியிடுகின்றன. 

2009ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச போட்டிகள் நடத்தப்படவில்லை. எனினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கடுமையான முயற்சிகள் காரணமாக 2015ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் மண்ணில் ஒருசில சர்வதேச போட்டிகள் நடந்தன. இருப்பினும் இந்திய அணி மட்டும் பாகிஸ்தானுடன் விளையாடுவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறது. 

2005-06 சீசனுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் இந்தியா விளையாடியது கிடையாது. கடைசியாக (2012-13) துபாயில் பாகிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா  பங்கேற்றது. அதில் பாகிஸ்தான் 2-1 என வெற்றி பெற்றது. இதனை அடுத்து பொதுவான இடங்களில் கூட பாகிஸ்தானுடன் போட்டிகளில் பங்கேற்க இந்தியா சம்மதிக்கவில்லை. ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் அணி, பெரும்பாலான சர்வதேச போட்டிகளில் எதிரணி மண்ணில் விளையாடியது. தவிர, யுஏஇ-ஐ தனது சொந்த மண்ணாக கொண்டு பெரும்பாலான சர்வதேச போட்டிகளை அங்கு நடத்தியது. இதனால் யுஏஇ மண்ணில் விளையாடிய அனுபவம் பாகிஸ்தானுக்கு இந்தியாவை விட அதிகமாகும். 

இதுவரை பாகிஸ்தான், யுஏஇ-ல் மொத்தம் 12 ஒருநாள் தொடர்களில் பங்கேற்றுள்ளது. இதில் நான்கு தொடர்களை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய முன்னணி அணிகளுடன் பாகிஸ்தான், யுஏஇ மண்ணில் மோதியுள்ளது. 

இது தவிர, 2016ம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை ஆரம்பித்து மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக யுஏஇ-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. மேலும், 2017ம் ஆண்டு இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான், சாம்பியன்ஸ் ட்ராஃபியை கைப்பற்றியதால், பாகிஸ்தான் அணி மிகுந்த நம்பிக்கையுடன் ஆசிய கோப்பை போட்டியில் களமிறங்க காத்திருக்கிறது. 

கேப்டனாக பதவி ஏற்றது முதல் ஆசிய அளவில் வெற்றிகரமாக பல தொடர்களை வென்ற விராட் கோலிக்கு, ஆசிய கோப்பை போட்டிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது, இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. இருப்பினும் முன்னாள் வெற்றி கேப்டன் எம்.எஸ். தோனி இருப்பது இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்கும். மேலும், அணியில் அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ் மற்றும் பும்ரா, சாஹல், குல்தீப் உள்ளிட்ட இளம் வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். 

இது மட்டுமில்லாமல், யுஏஇ மண்ணில் நடைபெற்ற இரண்டு ஆசிய கோப்பை போட்டிகளிலும் இந்தியா (1984, 1995) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஆறு ஆசிய கோப்பைகளை இந்தியா வென்றிருக்கிறது. பாகிஸ்தான் இரண்டு கோப்பைகளை பெற்றுள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 18 ஒருநாள் தொடர்கள் நடைபெற்றுள்ளன. அதில் பாகிஸ்தான் 11 வெற்றிகளையும், இந்தியா 5 வெற்றிகளையும் பெற்றுள்ளன. இரண்டு தொடர் டிராவில் முடிவு பெற்றது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களது துவக்க போட்டியை, தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று களமிறங்கியுள்ள ஹாங்காங் அணியுடன் எதிர்கொள்கின்றன. பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 19ம் தேதி மோத உள்ளன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close