ஆசிய கோப்பை: ஒவ்வொரு அணியின் முக்கியமான வீரர்கள்!

  சௌந்தரியா   | Last Modified : 14 Sep, 2018 03:51 pm

asia-cup-key-players-for-each-team

ஆசியாவின் முன்னணி கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளும் 'ஆசிய கோப்பை' தொடர் தொடங்க உள்ளன. இதில் இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் விளையாடுகின்றன. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் முன்னோட்டமாகவே இந்தபோட்டியை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகள் கருதுகின்றன. 

எனவே வழக்கமான விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்த தொடர் நடக்கும் என்பதை நம்பலாம். இந்த தொடரில் ஒவ்வொரு அணியிலும் சிலர் சிறப்பாக விளையாடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதுப்படி இந்த 6 அணிகளின் முக்கிய வீரர்கள் பற்றிய தொகுப்பு இது...

ரஷித் கான் 

சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் உச்சரித்துக்கொண்டு இருந்த பெயர் ரஷித் கான். எப்படி போட்டாலும் அடிக்கிறான் டா... என்பது போல அடிக்கிற மாதிரி ஒரு பால் கூட போட மாட்றான் டா...  என தலைசிறந்த பேட்ஸ்மேன்களை அசர வைத்துக் கொண்டு இருந்தார் இந்த 20 வயது இளைஞர். ஐ.பி.எல் போட்டிகளில் உலகளவில் தனக்கென அடையாளம் பெற்ற ரஷித் கான், அதற்கு பிறகான போட்டிகளிலும் ஆப்கானிதான் அணியின் நட்சத்திரமாக விளங்கி வருகிறார். எனவே ஆசிய கோப்பையிலும் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தற்போதைய நிலையில் ரஷித்கான் தான் சிறந்த சூழற்பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். 2018ம் ஆண்டை பொறுத்தவரை 15 போட்டிகளில் பந்துவீசி இருக்கும் இவர் 38 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். குறிப்பாக இவரது எக்கானமி 3.95ஆக உள்ளது. இருந்தாலும் ஐ.பி.எல் போட்டிகளை தவிர்த்து ஆப்கானிஸ்தான் அணி பெரிதும் பலம் இல்லாத அணியை எதிர்த்து தான் விளையாடி இருக்கிறது என்பதால், ஆசிய கோப்பை ரஷித் கானுக்கு சவாலான ஒன்றாக கூட அமைய வாய்ப்பிருக்கிறது. 

ஐசிசி தரவரிசையில் இவர் தற்போது ஒருநாள் போட்டியில் 2வது இடத்திலும் டி20 போட்டியில் முதலாவது இடத்திலும் இருக்கிறார்.

ஹசன் அலி 

24 வயதாகும் ஹசன் அலி தற்போது ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கிறார். 33 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 68 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இதில் 3 முறை ஒரே போட்டியில் 5 விக்கெட்களை எடுத்துள்ளார். 2017ம் ஆண்டு சாம்பியன் கோப்பை போட்டியில் இவரது சிறப்பான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணியை இக்கட்டான சூழ்நிலைகளிலும் வெற்றி பெற செய்தார். இதற்கு பிறகு கிரிக்கெட் உலகின் கவனம் இவர் பக்கம் திரும்பியது. 2018ம் ஆண்டில் 7 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 12 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "இப்போதைக்கு நாங்கள் தான் சிறப்பான ஃபார்மில் இருக்கிறோம். இந்திய அணி சமீபத்தில் அடைந்த தோல்விகளால் அதிக அழுத்தத்தில் உள்ளது. மேலும் யு.ஏ.இ எங்களது சொந்த மைதானமாக உள்ளது" என்று கூறியிருந்தார். எனவே இவர் இந்திய அணிக்கு எதிராக எப்படி விளையாட உள்ளார் என்னும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

முஸ்தபிசூர் ரஹ்மான்

ஆசிய கோப்பை தொடரில் சிறந்த பவுலராக இவர் தான் இருப்பார் என்று தற்போதே பலர் கூற தொடங்கிவிட்டனர். ரஷித் கானை போல வங்கதேசத்தின் முஸ்தபிசூர் ரஹ்மான் ஐ.பி.எல் தொடரின் மூலம் தான் பிரபலமடைந்தார். அதற்கு முன் 2016ம் ஆண்டு வளர்ந்து வரும் வீரர் என்ற பட்டத்தையும் பெற்றார். 

தற்போது ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் இவர் 16வது இடத்தில் இருக்கிறார். 30 போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 56 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 2015ம் ஆண்டும் தனது 19 வயதில் இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் 11 விக்கெட் எடுத்து இவர் அசத்தினார். அடுத்த போட்டியிலும் 2 விக்கெட்கள் வீழ்த்தி 3 போட்டிகளில் 13 விக்கெட்கள் எடுத்தவர் என்ற பெருமையையும் பெற்றார். 

வங்கதேச பிட்ச் பெரும்பாலும் ஃபிலாட்டாக இருக்கும். இதுபோன்ற பிட்ச்களில் சிறப்பாக பந்துவீசக் கூடியவர் இவர். எனவே பேட்ஸ்மேன் இந்த பிட்ச்களில் முஸ்தபிசூர் வீசும் பந்துகளை சந்திக்க தடுமாறி வருகின்றனர். யு.ஏ.இ பிட்ச்களில் இன்னும் இவர் விளையாட வில்லை என்றாலும், அவையும் வங்கதேச பிட்ச்கள் போல தான் இருக்கும் என்பதால்,  இவருக்கு சாதகமாக அமையும். 

காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்து இவர் திரும்பி உள்ளார். எனவே முன்பை விட தற்போது ஃபிட்டாகவே இருக்கிறார். இது அவரது அணிக்கு பெரும் உதவியாக இருக்கும். 

அகிலா தனஞ்ஜய

ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் தற்போது 22வது இடத்தில் இருக்கிறார் 24 வயதாகும் இலங்கை சுழல் பந்துவீச்சாளர் அகிலா தனஞ்ஜய. 24 போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 35 விக்கெட்கள் எடுத்துள்ளார். 

சுழற்பந்து வீச்சாளர்களுக்கே உடைய கணிக்க முடியாது விதத்தில் பந்து வீசுவது இவரது திறமை. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு இவர் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றத்தை அடைந்து வருகிறார். 

குறிப்பாக2018ம் ஆண்டில் இலங்கை அணிக்காக சிறப்பாக விளையாடியவர்களுள் ஒருவராக இவர் இருக்கிறார். இந்தாண்டு 10 போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 17 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இந்த சிறப்பான ஃபார்மை ஆசிய போட்டிகளில் தொடர்வதே அவரது எண்ணமாக இருக்கும். 

ரோகித் சர்மா 

ஐசிசி தரவரிசையில் தற்போது 4வது இடத்தில் இருப்பவர் ரோகித் சர்மா. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட இருக்கிறார். 


உலக கோப்பை போட்டிகளுக்கு பின் ரோகித் சர்மாவின்  பேட்டிங்கில் சிறப்பான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆண்டு 9 போட்டிகளில் விளையாடி இருக்கும் ரோகித் சர்மா 324 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 252 ரன்கள் இரண்டே போட்டிகளில் எடுக்கப்பட்டவை.  இவரை பொறுத்தவரை அடித்தால் சதம் இல்லையென்றால் ஒற்றை இலக்க ரன்கள். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணிக்கு இவர் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார். மேலும் தொடர் ஆட்டங்களால் மற்ற  வீரர்கள் சோர்வுற்று இருக்கின்றனர். இதனால் ரோகித் இந்தியாவுக்கு முக்கியமான வீரர். 

மேலும் ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா செய்ய வேண்டிய சாதனைகள் நிறைய இருக்கின்றன. இன்னும் 18 சிக்சர்கள் எடுத்தால் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் என்ற பெருமையை ரோகித் பெறுவார். இது போல இன்னும் நிறைய சாதனைகளை இந்த தொடர் மூலம் ரோகித் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கலாம். 

ஹாங்காங்

இந்தாண்டு ஆசிய போட்டியில் வீக்கான அணியாக ஹாங்காங் இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணியின் வீரர்கள் உலகின் கவனத்தை பெற உழைக்க வேண்டும். இப்போதைக்கு ஐசாஸ் கான், பாபர் ஹயட், நிசாகட் கான் ஆகியோர் முக்கியமான வீரர்களாக கருதப்படுகின்றனர். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.