இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மறக்க முடியாத ஆசிய கோப்பை போட்டிகள்

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2018 06:48 pm

asia-cup-memorable-matches-between-india-pakistan

இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே அனைவருக்கும் தனி ஆர்வம் தான். பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நீண்ட நாட்களுக்கு பிறகு காண ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

2018 ஆசிய கோப்பை போட்டி யுனைடெட் அரபு அமீரகத்தில் நாளை (15ம் தேதி) தொடங்குகிறது. இதில் அனைவரின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் 19ம் தேதி நடக்கிறது. சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதும் முதல் போட்டி இதுவாகும். இதுவரை ஆசிய கோப்பை போட்டியில் இந்த இரு அணிகளும் 12 முறை மோதியுள்ளது. அதில் இந்தியா 6 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் சந்தித்துளளது. 

தற்போது இரு அணிகளின் மறக்கமுடியாத ஆசிய கோப்பை போட்டிகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி பார்ப்போம்:

1984:

1984ம் ஆண்டு முதன் முறையாக ஆசிய கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்தியா 188 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது. பிறகு விளையாடிய பாகிஸ்தான் 134 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய துவக்க வீரர் சுரிந்தர் கண்ணா, அரைசதம் அடித்து வெற்றிக்கு துணையாக நின்றார். 

1986:

அறிமுகமான இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடந்த ஆசிய கோப்பையில் இரு அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நடைபெற்றது. டாஸில் வென்ற இந்தியா, பாகிஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்தது. துவக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பாகிஸ்தான் 142 ரன்னில் ஆல்-அவுட்டானது. அர்ஷத் அயூப் 5 விக்கெட்கள் கைப்பற்றினார். இதனை தொடர்ந்து மொஹிந்தர் அமர்நாத்தின் 74 ரன்னுடன் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது இந்தியா.

1995:

மொய்ன் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி களம் கண்டது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. இன்சமாம் உல் ஹக் மற்றும் வாசிம் அக்ரமின் அரை சதத்தால் பாகிஸ்தான் 266 ரன் சேர்த்தது. இந்தியா 169 ரன்னுக்கு ஆல்-அவுட்டானது. இதன் மூலம் ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பாகிஸ்தான் ருசித்தது. 

2000: 

முதலில் ஆடிய பாகிஸ்தான் 296 ரன்களை வெற்றி இலக்காக இந்தியாவுக்கு நிர்ணயித்தது. இதனை தொடர்ந்து பேட் செய்த இந்தியா 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. இப்போட்டி இந்தியாவின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் மற்றும் பேட்ஸ்மேன் அஜய் ஜடேஜாவின் கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது.

2004: 

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 300 ரன் அடித்தது. சோயிப் மாலிக் சதமடித்து அசத்தினார். இந்திய அணி 241 ரன்னில் வீழ்ந்தது. இதனால் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 

2008:

இந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்தது. தோனி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா சிறப்பாக செயல்பட்டு 309 ரன்களை வெற்றி இலக்கை எதிரி அணிக்கு நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 2 மட்டும் இழந்து வெற்றி பெற்றது. யூனிஸ் கான் (123 ரன்) மற்றும் மிஸ்பா உல் ஹக் (70 ரன்) வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர்.  

2008

கராச்சியில் நடந்த இப்போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் (299/4) 300 ரன்களை வெற்றி இலக்காக இந்தியாவுக்கு நிர்ணயித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடிய இந்தியாவின் அதிரடி மன்னன் விரேந்தர் சேவாக் சதமடித்ததில் இந்திய அணி (301/4) 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2010:

டம்புல்லாவில் டாஸ் வென்ற எம்.எஸ். தோனி, பாகிஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்தார். இதனால் பாகிஸ்தான் (267/10) 268 ரன்களை வெற்றி இலக்கை நிர்ணயித்தது. இதன் பின் களத்திற்கு வந்த இந்திய அணியின் துவக்கம் அதிரடியாக இருந்தது. கவுதம் கம்பிர் (83) மற்றும் கேப்டன் தோனி (56) அரைசதம் அடித்தனர். இதனால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. கவுதம் கம்பிர் ஆட்ட-நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

2012:

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன் எடுத்தது. இதன் பிறகு களம் கண்ட இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் 52 ரன் எடுத்தார். அவருடன் களத்தில் இருந்த விராட் கோலி, 183 ரன் எடுத்து அசத்தினார். ஒருநாள் போட்டியில் அதிக ரன்னை பதிவு செய்த கோலியால் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் டெண்டுல்கரின் கடைசி ஒருநாள் போட்டியாகவும் அது அமைந்தது.

2014:

பேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட இந்தியா 245 ரன் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், 113 ரன்னில் 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இதன் பிறகு 5-வது விக்கெட்டின் பார்ட்னர்ஷிப், பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிலிருந்து பாகிஸ்தானின் ஸ்கோர் அவர்களின் கட்டுக்குள் வர, அஷ்வினின் கடைசி ஓவரில் ஷாஹித் அப்ரிடியின் சிறந்த இரண்டு சிக்ஸரால் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

2016:

ஆசிய கோப்பை என்றாலே ஒருநாள் போட்டி தான் என்ற விதியை மாற்றி டி20 போட்டியாக அந்த ஆண்டு நடைபெற்றது. பாகிஸ்தான் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டு 83 ரன்னில் சுருட்டப்பட்டது. ஹர்திக் பாண்டியா 3, ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினார். இதன் பிறகு விராட் கோலியின் 49 ரன்னால், இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

- newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close