பட்டைய கிளப்பிய பொங்கல் ரிலீஸ் படங்கள்! ஒரு பார்வை! 2010 to 2019

  சாரா   | Last Modified : 16 Jan, 2020 07:03 pm

இந்த வருஷம் பொங்கல் ரிலீஸ் படங்கள் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், கடந்த வருஷம் வரையில், 2010 முதல் 2019 வரை பொங்கல் பண்டிகை தினத்தில் வந்து, ரசிகர்களை சந்தோஷம் பொங்க வைத்த பொங்கல் திரைப்படங்களைப் பற்றிய ஒரு சின்ன ரீவைண்ட்!

கடந்த 2019ம் வருஷ பொங்கல் ரிலீஸ் படங்களான சூப்பர் ஸ்டாரின் பேட்ட,  தல அஜித் நடித்த விஸ்வாசம் ரெண்டுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. திருப்தியாய் பொங்கல் பண்டிகையை இந்தப் படங்களைப் பார்த்து மகிழ்ந்து, கொண்டாடினார்கள். இந்த வருஷம் தர்பார் கொஞ்சம் லேட்டாகவும், லேட்டஸ்டாகவும் வராமல் சீக்கிரமே வெளியானதிலும், கலவையான விமர்சனத்தினாலும் ரசிகர்களை அதிகளவில் கவரவில்லை.

அப்புறம் ‘பட்டாஸ்’ படம் முதல் பாதி நல்லாயிருந்தாலும், அரத பழசான கதை பெரியளவில் ரசிகர்களைக் கவராமல் போனதில் கலெக்‌ஷனும் வீக் என்கிறது கோலிவுட். நிறைய தியேட்டர்களை இன்னும் தர்பார் ரஜினியே ஆக்கிரமித்து இருப்பதால் பட்டாஸ் படமும் கலெக்‌ஷனில் டல் தான்.

பைரவா: 2017 பொங்கல் தினத்தில் வந்த இந்தப் படம், விஜய்யின் 60 வது படம். விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏற்கனவே விஜய்யை வைத்து அழகிய தமிழ் மகன் படத்தைக் கொடுத்த இயக்குநர் பரதன் இப்படத்தை இயக்கியிருந்தார். அதிரடி நாயகன் விஜய்யுடன், குடும்பக் குத்துவிளக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில் சொல்லாயோ...என தோள்கள் குலுங்க ஆடிய இந்த காம்போ புதுசாக தெரிந்தது. சதீஷ் காமெடியில் கலகலக்க வைக்க, ஜெகபதி பாபு வில்லனாக வந்து மிரட்டினார். கல்விக் கொள்ளையைப் பற்றி பேசிய இந்த அதிரடித் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடியதால் முதல் வாரத்திலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்தது.  

ரஜினி முருகன்: 2016ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவந்த இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க, நாயகன் சிவகார்த்திகேயன், காமெடியன் சூரி, இயக்குநர் பொன்ராம் என வருத்தபடாத வாலிபர் சங்கம் டீம் மீண்டும் கூட்டணி போட்ட படம் இது. காமெடி, சென்டிமென்ட், ஆக்‌ஷன் என கமர்ஷியல் பேக்கேஜ் ஆக தயாரான இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாதபடி சோதனைகள்! அந்த தடைகளையெல்லாம் தாண்டி வந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி கீர்த்தி சுரேஷ் ஜோடிப்பொருத்தம் சூப்பராக ஒர்க் அவுட்டானது. சிவகார்த்திகேயன்–சூரியின் காமெடி அதகளமும், சமுத்திரக்கனியின் வில்லத்தனமும், ராஜ்கிரணின் உருக்கமும், இமானின் பரவச இசையும், இயக்குநர் பொன்ராமின் தங்கு தடையில்லாத திரைக்கதையும் படத்துக்கு பலம் சேர்த்தது.

ஐ: 2015 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக, நாயகன் விக்ரமின் 50 வது படமாக வந்த இந்தப் படத்தை பிரம்மாண்டத்தின் பிராண்ட் அம்பாசிடரான ஷங்கர் இயக்க, ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரித்திருந்தார். அழகு, கடவுள், அரசன், ஆசான், தலைவன் எனப் பல்வேறு அர்த்தங்கள் பொதிந்த இந்த ஐ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் இதே பெயரிலேயே வெளியானது. நாயகன் விக்ரமின் அர்ப்பணிப்பு, நாயகி எமிஜாக்சனின் கிறங்க வைக்கும் கிளாமர், இயக்குநர் ஷங்கரின் பிரமாண்டமான படைப்பாக்கம், சுபாவின் எழுத்தாக்கம் என எல்லாமும் சேர்ந்து படத்தை ஹிடடாக்கியது.

ஜில்லா: 2014 ஆம் ஆண்டின் பொங்கல் தினம் தல–தளபதி ரசிகர்களுக்கு ரொம்பவும் சிறப்பான பொங்கலாக அமைந்தது. விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் படங்கள் ரிலீஸ் ஆனது. ஒரு மாஸ் ஹீரோ படம் வந்தாலே தியேட்டர்களை தெறிக்க விடும் ரசிகர்கள், ஒரே நேரத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் படம் வரும்போது சும்மாவா இருப்பார்கள்! இரண்டு படங்களையும் கொண்டாடித் தீர்த்தனர். அப்பா-மகன் பாசத்துடன் ஃபேமிலி சென்டிமென்ட் பேக்கேஜில் வந்த ஜில்லா படத்தை அறிமுக இயக்குநர் நேசன் இயக்க, பல சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. இதில் செம ஸ்டைலாக தோன்றி அசத்தினார் விஜய். டூயட்டில் கவர்ச்சியும், சூரியோடு சேர்ந்து காமெடியான நடிப்பையும் காட்டினார் நாயகி காஜல் அகர்வால். இந்தப் படம் ஃபாக்ஸ் அபீஸில் ஓரளவுக்கு நல்ல வசூலை கொடுத்தது.

வீரம்: சால்ட் அண்டு பெப்பர் லுக்கில், வேட்டி-சட்டையில், கிராமத்து இளைஞன் கெட்டப்பில் இருந்த பிரம்மாணடமான கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து வீரம் படத்தை வெல்கம் செய்தனர் அஜித் ரசிகர்கள். அண்ணன்-தம்பி பாசக்கதையைக் கொண்ட இப்படத்தை சிவா இயக்க, பாரம்பரியமிக்க விஜயா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தம்பிகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் அண்ணனாக அசத்தினார் அஜித். அவரை காதலியாக வந்த தமன்னா, ஹோம்லி-கிளாமர் என ரெண்டு ஏரியாவையும் கவர் பண்ணி ரசிகர்களுக்கு தூண்டில் போட்டார். பாசக்கார தம்பிகளில் ஒருவராக விதார்த்தும், விசுவாசமான வேலைக்காரத் தம்பியாக அப்புக்குட்டியும், கோக்கு மாக்சய்து சிரிக்க வைத்த சந்தானமும் படத்தின் வெற்றிக்கு உதவ, படம் ஃபாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா : 2013 -ல் பொங்கல் தினத்தில் வெளிவந்த இந்த நகைச்சுவை படத்தில் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், சேது, விசாகா சிங்,கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர். ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கியிருந்தார். ஒரு பெண்ணால் பிரியும் மூன்று நண்பர்கள், அவளை அடைவதற்கு எடுக்கும் முயற்சிகளை நகைச்சுவையாக சொல்லும் கதை. கே.பாக்யராஜ் இயக்கி, நடித்து சூப்பர் ஹிட்டான இன்று போய் நாளை வா படத்தை அப்படியே நகல் எடுத்தது போலவே இருந்தது. ஆகவே, கே.பாக்யராஜ் படத்துக்கு எதிராக வழக்குப் போட்டு உரிய நஷ்ட ஈட்டையும் பெற்றார். காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறிய சந்தானத்துக்கு, அவர் அதே பாதையில் பயணம் செய்ய இந்தப் படத்தின் வெற்றி உதவியது. வயிற்றை பஞ்சராக்கிய காமெடிகள், தமனின் இசையில் உருவான பாடல்கள் படத்துக்கு பலம் சேர்த்தது.

நண்பன்: 2012ல் பொங்கல் அன்று வெளிவந்த இப்படம், இந்தியில் வந்து சூப்பர் ஹிட்டான த்ரீ இடியட்ஸ் படத்தின் ரீமேக். மல்ட்டி ஸ்டார் கதையைக் கொண்ட இதில் விஜய், ஜீவா, ஸ்ரீ காந்த் மூன்று பேரும் கதையின் நாயகர்களாக நடிக்க, கல்லூரி பேராசிரியராக நடித்திருந்தார் சத்யராஜ். இதில் இலியானா நாயகியாக வலம் வந்தார். சமூகப் பிரச்னைகளை சீரியஸாக அணுகும் இயக்குநர் ஷங்கர், இந்த காமெடி பேஸ் கதைகுள்ளே இன்றைய கல்வி முறை மாறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதிலும் வெற்றி கண்டார். ஒரிஜினலோ, ரீமேக்கோ...ஒரு படம் பார்ப்பவர் மனதை அப்படியே தன்வசப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தரமும், நம்பகத்தன்மையும் கொண்டதாய் இருந்தாலே போதும் என்பதை இந்தப் படத்தின் வெற்றி நிரூபணம் செய்தது.

காவலன்: மலையாளத்தில் ஹிட் அடித்த, பாடிகார்டு படத்தின் ரீமேக்காக வந்த காவலன், விஜய்யின் தொடர் சறுக்கலுக்கு வைக்கப்பட்ட முட்டுக்கட்டையாக இருந்தது. காற்றில் பறக்கும் வில்லன்கள், வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பன்ச் வசனங்கள், அநியாய அறிமுக பில்ட் அப்புஸ்... என எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் விஜய்யும், சிறு கேப்பில் கூட புகுந்து சிரிப்பு வெடி வைக்கும் வடிவேலுவும் படத்தை அலுப்பின்றி ரசிக்க வைத்தனர். தொடர்ந்து 6 தோல்விப் படங்கள் கொடுத்த சலிப்பு, அரசியலில் இறங்கலாமா? வேண்டாமா? என்கிற குழப்பம், இந்த சாஃப்ட் சப்ஜெக்ட்டை ரசிகர்கள் ஏற்பார்களா? என்கிற தயக்கம், 50-வது படமான சுறா தந்த தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்கிற விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் போராட்டத்திற்கு இடையே வெளியான காவலன் முதலுக்கு மோசம் செய்யவில்லை.  

ஆடுகளம்: தனுஷ், சினிமா கே‌ரிய‌ரில் தி பெஸ்ட் ஃபிலிம் என சூடம் ஏற்றி சத்தியம் செய்யும் அளவுக்கு சிறப்பான படமாக அமைந்தது ஆடுகளம். மதுரையை கதைக் களமாக கொண்டு, கிராமங்களில் பொங்கல் பண்டிகையின் போது நடக்கும் சேவல் சண்டைக்குப் பின்னால் இருக்கும் சூதாட்டத்தையும், அதன் பின்னணியில் இருக்கும் குரோதத்தையும் அம்பலமாக்கிய இந்தப் படம், சிறந்த நடிகர்- சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 6 தேசிய விருதுகளை அள்ளி வந்தது. சேவல் சண்டைக்காகவே நேர்ந்து விடப்பட்ட கிராமத்து இளைஞனாகவே மாறிய தனுஷ், ஆங்கிலோ இந்தியப் பெண்ணாகவே மாறிய காதலி டாப்ஸி, கடும் கோபக்கரனாக வாழ்ந்த பேட்டக்காரன் பெரியவர் ஜெயபாலன் என எல்லாருமே எதார்த்தமான நடிப்பை வழங்க, நேர்த்தியான இயக்கத்தால் வெற்றிக் கனியைப் பறித்தார் இயக்குநர் வெற்றிமாறன்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close