தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு

Last Modified : 17 Aug, 2017 10:07 am

இந்தியாவில் தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் அதிக அளவு குற்றங்கள் தமிழகத்தில் தான் நடைபெறுகின்றன என தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் இருந்து தமிழ் நாட்டில் தலித்துகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து உள்ளன. தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 6-ல் ஒரு வழக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 32,000-க்கும் மேற்பட்ட வழக்குகளில் 5,300 வழக்குகள் தமிழகத்தில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரில் சுமார் 2000 வழக்குகள் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பந்தப்பட்டவையாகும். கடந்த ஏழு மாத காலமாக இந்த ஆணையத்தின் தலைமை பொறுப்புக்கு யாரும் நியமனம் செய்யப்படாததால் வழக்கு விசாரணையில் தொய்வு காணப்பட்டது. தற்போது தலைமை ஆணையர் நியமிக்கப்பட்டு விட்டதால் நிலுவையில் உள்ள வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 4 வாரத்தில் 400-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு அவற்றில் பல வழக்குகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிலையங்களில் எஸ்.சி மாணவர்களுக்கு 18% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும் தேசிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பழங்குடியின மற்றும் ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் தலித்துகளிடம் இருந்து பறிக்கப்பட்ட 5000 ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வழங்கவேண்டிய கல்வி உதவி தொகையை விரைந்து வழங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எஸ்.சி மக்களின் வங்கி கடனை ரத்து செய்வது குறித்து வங்கிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க மண்டல விசாரணை குழுக்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.