சினிமா பைனான்சியர் போத்ரா வங்கி கணக்கு முடக்கம்

Last Modified : 17 Aug, 2017 06:12 pm

கந்துவட்டி புகாரில் கைது செய்யப்பட்ட சினிமா பைனான்சியர் போத்ராவின் வங்கி கணக்குகளை முடக்கி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை தியாகராயநகரில் வசிக்கும் ஓட்டல் அதிபர் செந்தில் கணபதியின் புகாரின் பேரில் கந்துவட்டி வழக்கில் பிரபல சினிமா பைனான்சியர் போத்ராவும், அவரது மகன்கள் ககன்போத்ரா, சந்தீப்போத்ரா ஆகியோரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். ரூ.83½ லட்சம் கடன் தொகைக்கு ரூ.60 கோடி மதிப்புள்ள ஓட்டலை சொந்தம் கொண்டாடியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில், பிரபல பட அதிபர் சதீஷ்குமார் என்பவரும், போத்ரா மற்றும் அவரது மகன்கள் மீது, ரூ.15 லட்சம் கடன் தொகைக்கு ரூ.40 கோடி மதிப்புள்ள தனது 2 பங்களா வீடுகளை சொந்தம் கொண்டாடுவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கில் போத்ராவும், அவரது 2 மகன்களும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். மேலும், போத்ரா மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரையும் நீதிமன்ற உத்தரவை பெற்று, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களுக்கு எந்தெந்த வங்கிகளில் கணக்கு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக, கந்துவட்டி தடுப்பு பிரிவு எஸ்.ஐ.மீனா பிரியா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போத்ராவிடம் கடன் வாங்கியவர்கள், அதற்கான தவணை பணத்தை மாதந்தோறும் போத்ரா மற்றும் அவரது 2 மகன்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்தி வந்தனர். அந்த வகையில், முதற்கட்டமாக 6 வங்கிகளில் சினிமா பைனான்சியர் போத்ரா மற்றும் அவரது மகன்களுக்கு வரவு-செலவு கணக்குகள் இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த வங்கிக் கணக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். மேலும், பல வங்கிகளில் அவர்களுக்கு கணக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வங்கிக் கணக்குகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.