யானைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை; இது எங்க தெரியுமா?

Last Modified : 01 Jan, 1970 05:30 am

பாஜக ஆளும் வடஇந்திய மாநிலங்கள் சிலவற்றில் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை துவங்கி மக்களின் அதிருப்திக்கு ஆளாகி உள்ளது அரசு. இந்நிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக யானைகளுக்கு என பிரேத்தியேக அம்புலன்ஸ் சேவை ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது நமது தமிழ்நாட்டில் தான். பருவமழை பொய்த்துப் போனது, காடுகளில் உணவுப் பற்றாக் குறை போன்றவற்றின் காரணமாக காடுகளில் இருந்து யானைகள் ஊருக்குள் வருகின்றன. அவ்வாறு வரும் போது ரயில் போன்றவற்றில் அடிபட்டு யானைகள் இறக்கின்றன. மேலும் சாலைகளில் வரும் வாகனங்களில் மோதி காயமடைகின்றன. இது போன்று காயப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட யானைகளுக்கு சிகிச்சை அளிக்கவே இந்த ஆம்புலன்ஸானது உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனத்துறை மருத்துவர் அசோகன் பேசுகையில், "சத்தியமங்கலம், ஓசூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள புலிகள் காப்பகங்களில் விலங்குகளுக்கான மருத்துவ யூனிட் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 20 லட்ச ரூபாய் செலவில் யானைகளுக்காக இந்த ஹைட்ராலிக்ஸ் ஆம்புலன்ஸை உருவாக்கி உள்ளோம். இதில் 10 டன் எடையுள்ள யானைகள் வரை ஏற்றலாம். சிகிச்சைக்காக யானைகளை லாரியில் ஏற்றுவது என்பது எளிதல்ல. சாய்வு கோபுரம் அமைத்து, கும்கி யானைகள் உதவியோடு ஏற்ற வேண்டும். ஆனால் இந்த ஆம்புலன்சில் அவ்வாறு சிரமப்பட வேண்டியதில்லை. ஹைட்ராலிக்ஸ் உதவியுடன் அம்புலன்ஸின் தளத்தை கீழே இறக்கி வைத்து பின்னர் யானையை கயிறு கட்டி அதில் ஏற்றி விடலாம். தற்போது 5.5 டன் எடையுள்ள யானையை வைத்து மட்டும் சோதனை செய்துள்ளோம். இன்னும் இந்த ஆம்புலன்சில் கூடுதல் வசதிகள் செய்ய வேண்டி உள்ளது. இந்த ஆம்புலன்ஸ் உதவியுடன் காட்டுக்குள் விலங்குகளை நம்மால் கண்காணிக்க முடியும். இந்தியாவிலேயே யானைகளுக்கு ஆம்புலன்ஸ் என்பது இது தான் முதல்முறை" என்றார். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இந்த ஆம்புலன்ஸின் சோதனை ஓட்டமானது சமீபத்தில் நடைபெற்றது.

Advertisement:
[X] Close