ரஜினிக்காக அரசியல் ஒத்திகை : 20-ந் தேதி திருச்சியில் மாநாடு

Last Modified : 19 Aug, 2017 12:35 pm

ரஜினிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை கணிப்பதற்காகவும், அவருக்கான அரசியல் ஒத்திகையாகவும் 20-ந் தேதி திருச்சியில் மாநாடு நடத்துகிறார், ரஜினியின் நண்பர் தமிழருவி மணியன். சமீபகாலமாக, ராஜினி -கமல் இருவரின் கவனமும் அரசியல் பக்கம் திரும்பியிருக்கிறது."நாட்டில் 'சிஸ்டம்' சரியில்லை!" என அதிரடியாகப் பேசி அதிர வைத்திருக்கிறார் ரஜினி. தமிழக அரசு மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் கமல். ஆகவே, ரஜினி- கமல் இருவரில் அரசியல் களத்தில் குதிக்கப்போவது யாரு? என்கிற கேள்விதான் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இந்நிலையில், ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைக்கப் போகும் ஒத்திகை மாநாட்டை நடத்தப் போவதாக ரஜினியின் நண்பரும், காந்திய மக்கள் இயக்கத் தலைவருமான தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழருவி மணியன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "பொது வாழ்வின் புனிதத்தைப் பாழ்படுத்தி, ஊழலுக்கு உற்சவம் நடத்திக் கொண்டிருக்கும், திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கும் வேள்வியில் காந்திய மக்கள் இயக்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமர்ந்த இந்த இரண்டு திராவிடக் கட்சிகளால், ஊழல் பெருகிவிட்டது. இப்போது, ஆட்சியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை, உட்கட்சிக் குழப்பங்களால் கோட்டையிலிருந்து வெளித்தள்ளப்படுவதற்கான நாட்கள் எண்ணப்படுகின்றன. 'தமிழக அரசியலில் நல்ல மாற்றம் நிகழாதா?'என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் இந்த சூழலில், ரஜினிகாந்த் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்து, ஊழலின் ஆணிவேரை அறுத்தெறிவதற்கு உறுதி பூண்டிருக்கிறார். ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்? அவரால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் நிகழக் கூடுமா? அவரால் மக்கள் எதிர்பார்க்கும் நல்லரசியல் எப்படி அமைய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தருவதற்காகவும், ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்காகவும், காந்திய மக்கள் இயக்கம் ஆகஸ்ட் 20 அன்று திருச்சி உழவர் சந்தைத் திடலில் மாபெரும் மாநாட்டை நடத்துகிறது. ரஜினியை நேசிப்பவர்களும், அரசியல் மாற்றத்தை விரும்பும் பொது மக்களும் திரளாகக் கூடவிருக்கும் இந்த மாநாட்டின் முடிவில், எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கான அரசியல் திருப்புமுனை தொடங்கவிருக்கிறது" என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.