எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி, ஜெயலலிதா அணி உருவாகிய நிலை மீண்டும் வேண்டாம் - கருணாநிதி

Last Modified : 01 Jan, 1970 05:30 am

திமுக கட்சியின் தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை குறித்தும், கட்சியின் கூட்டணி குறித்தும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: "உடல் நலம் மோசனமான நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது கருணாநிதி எங்களை அழைத்து சில அறிவுரைகளைக் கூறினார். அப்போது கருணாநிதி பேசும் நிலையில் இருந்தார். மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதா திரும்பி வந்து ஆட்சி நடத்த வேண்டும். அப்படி அவர் வராவிட்டால் அதிமுக இரண்டாக உடையும். ஒருவேளை, அந்த நிலை ஏற்பட்டால் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா அணி உருவாகியிருந்த நிலையில் திமுக என்ன மாதிரியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததோ அதே நிலைப்பாட்டையே கடைப்பிடிக்க வேண்டும். அதிமுக ஆட்சி கலைவதற்கு திமுக காரணமாக இருந்துவிடாது என்றார். தற்போது கருணாநிதி நல்ல நிலையில் இருந்தாலும் அதிமுக ஆட்சியைக் கலைக்க முயற்சித்திருக்க மாட்டார். கருணாநிதியின் அறிவுரையைத்தான் ஸ்டாலின் தற்போது கடைப்பிடித்து வருகிறார். பிறர் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மேலும், தற்போது கருணாநிதிக்கு நினைவலைகள் மங்கிவிட்டது எனச் சொல்ல மாட்டேன். தொலைக்காட்சிகளைக் கூர்ந்து கவனிக்கிறார். பத்திரிகைகளைப் படிக்கச் சொல்லிக் கேட்கிறார். சளித் தொல்லையால் தொண்டையில் அவருக்கு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அதை எடுத்துவிட்டால் பேசுவார். கட்சி கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும்" என அவர் கூறினார்.

Advertisement:
[X] Close