சசிகலாவை நீக்கினால் ஆட்சி கவிழும்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ மிரட்டல்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் சசிகலா உள்ளிட்டவர்களை நீக்கினால், எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும் என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மிரட்டல் விடுத்துள்ளார். டி.டி.வி. தினகரன் அணி சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வருகிற 23-ந் தேதி ஆர்.கே.நகர் பகுதியில் நடைபெற உள்ளது. இது குறித்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான செந்தில்பாலாஜி, பழனியப்பன், வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிந்து வெளியில் வந்த எம்.எல்.ஏ. பழனியப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி பழனிசாமி அரசை ஊழல் அரசு என்றனர். இப்போது அவர்களுடன் இணைந்து இவர்களும் ஊழல் செய்யப்போகிறார்களா? பதவிக்காகவும், சுயநலத்துக்காகவுமே இந்த இணைப்பு பேச்சுவார்தை நடைபெறுகிறது. அம்மா இறந்த பிறகு, கட்சி நலன், ஆட்சி நலன் கருதி ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்கினார் சசிகலா. அதன்பிறகு மூத்த அமைச்சர்கள் உள்பட மாவட்டம், தொகுதி வாரியாக அனைத்து தலைவர்களும் வந்து சசிகலாவின் காலில் விழுந்து நீங்கள் தான் கட்சியை வழி நடத்த வேண்டும் என்று கேட்டதால் தான் அவர் பொதுச் செயலாளர் ஆனார். அன்று அவரது முகத்தை பார்க்க தைரியம் இல்லாதவர்கள்தான் இன்று ஏதேதோ சொல்கிறார்கள். திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தவர் சசிகலா. அவரும் இன்று ஏதேதோ சொல்கிறார். இந்த ஆட்சி ஒரு பஸ் போன்றது. அந்த பஸ்சை நல்லமுறையில் பத்திரமாக கொண்டு சேர்க்க வேண்டும் என முதலில் ஒரு ஓட்டுனரை நியமித்தோம். ஆனால், அவர் பயணிகளின் எண்ணத்துக்கு ஏற்பவும், சரியான பாதையில் பஸ்சை ஓட்டாததாலும் அவருக்கு பதிலாக புதிய ஓட்டுனரை நியமித்தோம். இந்த பஸ் ஆபத்தான பாதையில் போகக்கூடாது. இந்த ஆட்சியை கலைக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. அந்த நிலையை அவர்கள் உருவாக்கிவிடக்கூடாது. எடப்பாடி அணியில் உள்ள பல எம்.எல்.ஏ.க்கள் எங்களோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் மூலம், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்ற போவதாக தகவல் வந்துள்ளது. அப்படி நடந்தால் தற்போதுள்ள ஓட்டுனரும் மாற்றப்படுவார். தொண்டர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆட்சி நடைபெறவில்லை என்றால் முதல்-அமைச்சரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Advertisement:
[X] Close