நீட் தேர்வு ; 24-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Last Modified : 23 Aug, 2017 11:45 am

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக, மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வரும் 24-ஆம் தேதி சென்னையில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே நடைபெறும் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், நீட் தேர்வை தமிழகத்தின் மீது வலுக்கட்டாயமாக திணித்து, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை மத்திய, மாநில அரசுகள் தகர்த்து விட்டன. கூட்டாட்சி தத்துவத்தை கேலி பண்ணும் விதமாக மத்திய அரசு நடந்து கொண்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தின் உணர்வுகளை காயப்படுத்தியதுடன், சர்வாதிகார மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது. தமிழகத்தை பொறுத்த வரை பாஜக இரட்டை வேடம் போடுகிறது. அதிமுக அரசின் நிர்வாகம் தோற்றுவிட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக வரும் 24-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே காலை 10 மணி அளவில் அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Advertisement:
[X] Close