நாளை ஆடலரசனின் ஆருத்ரா தரிசனம்! என்ன விசேஷம் தெரியுமா?

  சாரா   | Last Modified : 09 Jan, 2020 07:17 pm

ஞானா காசம், சிற்றம்பலம், தில்லைவனம் என்ற பெயர்களால் சிறப்பிக்கப்படும் சிதம்பரம், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குகிறது. தில்லையில் இறைவனுக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருவாதிரை, திருவோணம் என்ற இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டும் தான், இருபத்தேழு நட்சத்திரங்களில் ‘திரு’ என்ற அடைமொழி உள்ளது.

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி சிறப்பு மிக்கது. திருவாதிரையை சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்பர். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை ருத்திரன் என்பதால் இது மேலும் சிறப்பு பெறுகிறது.

இதன் காரணமாகவே சிவபிரான் ஆதிரை முதல்வன் என்றும், ஆதிரையான் என்றும் போற்றப்படுகிறார். இங்கு ஆனந்த நடனமாடும் ஈசனின் நடனம் படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் என சிவனின் ஐந்து வகையான தொழில்களை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது.

தில்லையம்பதியில் உள்ள  சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்த சபை, ராஜ சபை ஆகிய ஐந்து சபைகளில், நடராஜப் பெருமான் திருநடனம் புரியும் இடம் சிற்றம்பலம் எனப்படும். இங்குள்ள பொன்னம்பலம் என்ற கனக சபையில் ஸ்படிக லிங்கத்துக்குத் தினமும் ஆறுகால பூஜையும், ரத்தின சபாபதிக்கு இரண்டாங் காலத்தில் அபிஷேகமும் நடைபெறுகிறது.

மூன்றாம் குலோத்துங்கன் பொன்வேய்ந்துக் கொடுத்துள்ள பேரம்பலம் எனப்படும்  தேவசபையில் பஞ்ச மூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர். நிருத்த சபை என்பது ஆடலரசனான எம் பெருமான் ஊர்த்துவத் தாண்டவம் புரிந்த இடமாகும். ராஜசபை என்பது ஆயிரங்கால் மண்டபங்களைக் கொண்டது.

ஆனி, மார்கழி மாத விசேஷத் திருவிழாக்களின்போது, கடைசி நாளான பத்தாம் நாள் ஈஸ்வரனும் அம்பிகையும் முன்னும் பின்னுமாக மாறி மாறி நடனம் செய்து கொண்டு, சிற்சபைக்கு எழுந்தருளும் காட்சி காண கண்கோடி வேண்டும். ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து சித்ஸபைக்கு அம்பிகையும், ஈசனும் திருநடனம் புரிந்துகொண்டே செல்லும் அற்புத காட்சிதான் ஆருத்ரா தரிசனம் ஆகும். இந்தக் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தில்லையம்பதியில் கூடுவார்கள். தில்லையில் திருநடனம்புரியும் சித்ஸபேசரின் திருநடன திருக்காட்சியைக் கண்டவர்கள் புண்ணியம் செய்தவர்களாவர்.

மார்கழி மாதத்தில் திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு ஆலயங்களில் திருவிழா நடைபெறுகின்றது. அந்த திருவாதிரை நாளில் இறைவனுக்குக் ‘களி’நிவேதனம் செய்வது வழக்கம். இதைப் பற்றிய வரலாறு ஒன்றுண்டு.

சிதம்பரம் அருகேயுள்ள ஒரு சிறிய ஊரில் வாழ்ந்து வந்தவர் சேந்தனார் என்னும் விறகு வெட்டி. தீவிர சிவபக்தரான இவர் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின் உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

தனது அடியவர்களை சோதித்து,அவர் பெருமையை தரணிக்கு பறைசாற்றும் ஈசனின் திருவிளையாடல் சேந்தனாரிடமும் தொடர்ந்தது. ஒருநாள் அதிக மழை பெய்து விறகுகள் ஈரமானதால், அவரால் விறகு விற்க முடியவில்லை. அரிசி வாங்க காசு இல்லாத காரணத்தினால், வீட்டிலிருந்த கேழ்வரகில் களி செய்து சிவனடியார் வரவை எதிர்பார்த்திருந்தார். சோதனையாக யாரும் வராத நிலையில் மனம் நொந்து போனார். அவரின் பக்தியை உலகிற்கு உணர்த்த, நடராஜப் பெருமானே,ஒரு சிவனடியார் வேடத்தில் சேந்தனார் வீட்டுக்கு வந்தார்.

அவரை வரவேற்று மகிழ்ந்த சேந்தனார், கேழ்வரகுக் களியை அவருக்கு அளித்தார். சிவனடியார் வேடத்தில் வந்த ஈசன்,களியை விரும்பி உண்டதுடன், எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்குத் தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் வழக்கம்போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோவில் கருவறையைத் திறந்த போது, நடராஜப் பெருமானைச் சுற்றி இருந்த களிச் சிதறல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். விவரம் மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது. நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதை கனவில் தோன்றி ஏற்கெனவே மன்னருக்குத் தெரிவித்திருந்ததால்,சேந்தனார் எங்கிருக்கிறார் என்று கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார் மன்னர்.

நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழாவான அன்று,சேந்தனாரும் அங்கு  சென்றிருந்தார்.இறைவனை தேரில் எழுந்தருள செய்தப்பின் மன்னர் உள்பட எல்லாரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மழை காரணமாக தேர்ச் சக்கரங்கள் சேற்றில் அழுந்தியிருந்ததால் தேர் சிறிதும் நகரவில்லை. அப்போது "சேந்தா! நீ பல்லாண்டு பாடு' என்று ஒரு அசரீரி கேட்டது.

அங்கிருந்த சேந்தனார் இறைவன் அருளால்,இறைவனை வாழ்த்தி 13 பாடல்களைப் பாட, உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரிடம், மன்னர், தாம் கண்ட கனவை கூறினார்.

சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம் ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள். இதை உணர்த்தும் வகையில் இன்றும் தில்லை நடராஜப் பெருமானுக்கு திருவாதிரை திரு நாளில் களி படைக்கப்படுகிறது.

நாமும் இந்த திருவாதிரை திருநாளில் அந்த ஆடலரசனின் ஆனந்த நடனத்தை கண்டு அவன் அருளுக்கு பாத்திரமாவோம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close