அரசியல் அரிதாரத்தில் பட்டையகிளப்பும் உலக நாயகன்... நொண்டி அடிக்கும் சூப்பர் ஸ்டார்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 31 May, 2018 07:25 pm
kamal-haasan-s-makkal-needhi-maiam-on-100th-day

திரைத்துறையில் சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என்ற பெயருடன் பல கெட்டப்களில் கலக்கி, ரசிகர்களின் மனதை கவர்ந்து வெற்றி நடைப்போட்டுக்கொண்டிருக்கும் ரஜினியும், கமலும் தனது அரசியல் பிரவேசத்தில் சாதித்தனரா என்பது கேள்விக்குறியே என்கின்றனர் பொதுமக்கள்.

ஆளவந்தானின் ஆட்டங்கள்! 

ஒரு கலைஞர் நாட்டை ஆள தகுதியுள்ளவர்களா என்பதற்கு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் தலைவர்களே உதாரணம். அவர்களை பின் தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய அடுத்த ஸ்டார்ஸ் கமலும், ரஜினியும் தான். அந்த வகையில் கமல் அரசியலில் இறங்கி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன. ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து இன்றுடன் 150 நாட்கள் ஆகின்றன. கமல்ஹாசனின் இந்த 100 நாள் வெற்றியை கொண்டாடும் வகையில் ட்விட்டரில் #100DaysOfMakkalNeedhiMaiam என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கமல்ஹாசன் கடந்த ஆண்டு நவம்பர் 7 இல் அதாவது அவரது பிறந்த நாளன்று தான் அரசியலில் இறங்குவது உறுதி என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன்பிறகு பிப். 21 ஆம் தேதி இராமேஸ்வரத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்கி மிரள வைத்தார். இதையடுத்து ‘மக்கள் நீதி மய்யம்’ என கட்சியின் பெயரை சத்தமாக அறிவித்துவிட்டு கொள்கையை தேடிக்கொண்டிருக்கிறேன், அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என சினிமா வசனங்களை போன்று சட்டென்று முடித்துக்கொண்டார். அரசியலுக்கு வந்தாச்சு, கட்சியையும் சொல்லியாச்சி அடுத்து என்ன சுற்றுப்பயணம்தான் என எண்ணூர், நெல்லை, மதுரை என பல ஊர்களுக்கு சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி கிராம சபைக்கூட்டம், மக்கள் பிரச்னைக்கு குரல், அரசியல் விமர்சனங்கள் என தனது பஞ்சதந்திர ரோலை சிறப்பாக செய்துக்கொண்டிருக்கிறார் உலகநாயகன். நடிப்புக்கான ரோல் ஃபர்பெக்ட் என்றாலும் அரசியலில் மட்டுமே அவரது கவனம் இல்லை என்பது சாமானியருக்கு கூட தெரியும். ஏனெனில் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், விளம்பரம், பிக்பாஸ், திரைத்துறை என அரசியலை தாண்டிய இவரது தசாவதாரம், சாதிக்கவந்த கமல் அரசியலில் சறுக்கிவிட்டாரோ என நினைக்க வைக்கிறது. 

இருப்பினும் அரசியலில் தன்னுடைய எதிரி யார், கூட்டணி யார் என வாய்திறக்காத கமல், “உலக நாயகனே! கண்டங்கள் கண்டு வியக்கும்... இனி ஐநாவும் உன்னை அழைக்கும்...” என்ற வரிகளை உண்மையாக்குவாரா? 100 நாட்கள் 1000 நாட்களை கடக்குமா? எதிர்காலத்தில் “எம்.என்.எம்” மக்களுக்கு நீதி கிடைக்கும் மையமாக அமையுமா? என்பது பயணத்தின் முடிவில் தெரியவரும்.  

ஆடுபுலி ஆட்டத்தில் ஆன்மீகவாதி!!


கமல்ஹாசனே அரசியலில் குதிக்கும்போது நமக்குனு ஒரு சங்கம் இருக்குது, நமக்குனு ஒரு கூட்டம் இருக்குது, நமக்குனு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்குது அதைவிட அரசியலுக்கு சென்றால் வெற்றி கிடைக்கும் என்ற ராசி இருக்குது என ஆன்மீக அரசியலில் களமிறங்கிய ரஜினி, டிசம்பர் 31 ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். அரசியலுக்கு வருவது உறுதி, ஆன்மீக அரசியல் தான் என்னுடைய கொள்கை, போருக்காக காத்துக்கொண்டிருக்கிறேன், நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக களமிறங்குவேன் என அடுக்காக வசனங்களை அள்ளிவீசிவிட்டு ஆன்மிக பயணத்துக்கு சென்றுவிட்டார். இதெல்லாம் சரி கட்சி எங்கே சார் என கேட்டால், போர் வரும்போது சொல்லுவேன் என்கிறார் வேங்கை மகன்!

“ஆன்மிக அரசியல்” வழியில் பயணிக்கும் ரஜினிகாந்த் உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்ய துடிக்கிறாரா? அல்லது ரஜினி மக்கள் மன்றம் பெயரில் ரசிகர்களுடன் போட்டோக்களை எடுத்துக்கொண்டு தனது படத்திற்கான பிரமோஷன் பாதையை கடக்கிறாரா? என்பது பலரின் மைண்ட் வாய்ஸ்! ரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்தை கன்பார்ம் செய்து இன்றுடன் 150 நாட்கள் நிறைவடைந்தது. ஆனால் மக்களுக்காக களமிறங்கிய முதல் பயணம் நேற்றைய தூத்துக்குடி பயணமே! அதற்கான பரிசு, சூப்பர் ஸ்டாரை பார்த்து, யார் நீங்க? என்ற கேள்வியும், நான் தான் பா ரஜினிகாந்த் என்ற பதிலுமே!

"வயசானாலும் உங்க ஸ்டைலிலும் அழகும் இன்னும் உங்களவிட்டு போகல " என்பது ரஜினிக்காக எழுதப்பட்ட வசனங்கள்! வயசானதை மறந்து நீங்கள் யார் என கேட்ட பொதுமக்களுக்கு ரஜினி ரசிகர்களின் குரல் “வருங்கால முதலமைச்சர்”. கொள்கை இருக்கு கட்சி இல்லை என சுற்றுப்பயணம் சுற்றிவரும் ரஜினி மக்கள் மத்தியில் ஜொலிப்பாரா? என்பது தேர்தலில் தெரியும். அவ்வப்போது மக்களுக்காக எழுப்பப்படும் குரல் என ஏதாவது ஒரு சமூக பிரச்னைக்கு குரல் கொடுக்கப்போய் சமூக விரோதிகள் மத்தியில் சிக்கிக்கொள்கிறார். மேலும் காவல்துறைக்கும் ஆளும் (மத்திய, மாநில) அரசுக்கு ஆதரவாக பேசி அரசியல்வாதிகளிடம் அவப்பெயரும் வாங்கிக்கொள்கிறார். ரஜினி தான் குரலாகதான் ஒலிக்கிறாரா? அல்லது பாஜக, அதிமுகவின் கூக்குரலா என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வி கணைகளாக உள்ளன. அரசியலில் குதிக்கும் ரஜினி, அதிமுகவை நெருங்கு எதிர்க்கட்சிகளை நெருக்குகிறாரா? என்பது சந்தேமாகவே உள்ளது. ஆளும் ஆடுகளை வெட்டி புலியாக ஜொலிப்பாரா? அல்லது ஆடுகளுக்கு பின்னால் சென்று ஆட்டத்தை சொதப்புவாரா என்பது போரின்போது தெரியும்.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close