நீட் தேர்வு விலக்கு அவசியம்: மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

  Newstm News Desk   | Last Modified : 06 Jun, 2018 09:21 pm

tamilnadu-should-be-exempted-from-neet-cpi-m

நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால், அதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னணியில் தமிழக மாணவர்கள் மிகக்கடுமையாக  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உரிய தயாரிப்புகளின்றி 6 மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கியது, தமிழ் மொழி வினாத்தாளில் மொழி பெயர்ப்புகள் சரியாக இல்லாததால் ஏற்பட்ட பாதிப்பு,  வேறு மாநிலங்களுக்கு கடைசிநேரத்தில் அலைக்கழிக்கப்பட்டது, மாநில பாடத்திட்டத்தில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சம்பந்தமில்லாத வகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டது ஆகியவை தமிழக மாணவர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளன.

தமிழ்மொழியில் கேட்கப்பட்டிருந்த நீட் கேள்வித்தாள் பல்வேறு பிழைகளுடன் இருந்ததை அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் சுட்டிக்காட்டிய பின்னரும், சிபிஎஸ்இயோ, மத்திய அரசோ அதை கணக்கில் எடுத்துக்கொள்ளாத காரணத்தாலேயே,  அகில இந்திய அளவில் தேர்ச்சி விகிதம் 60 சதவிகிதமாக இருக்கும் போது தமிழகத்தில் அது 40 சதவிகிதமாக குறைந்து உள்ளது. மாநிலங்கள் வாயிலாக தேர்ச்சி விகிதத்தில் கடைசிக்கு முந்தைய நிலையில் வந்திருக்கிறது தமிழகம்.

மருத்துவராக வேண்டும் என்ற தமிழக மாணவர்களின் கனவு கலைந்துபோயிருக்கிறது. நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்கிற காரணத்தினால்தான், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென அனைத்துக்கட்சிகளும் ஒருங்கிணைந்து இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி, மாண்புமிகு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மாநில அரசும் எந்த அழுத்தத்தையும் மத்திய அரசுக்கு தரவில்லை.

இதன் காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத காரணத்தால், இவ்வாண்டு முயற்சி செய்து தேர்ச்சியடையாத பிரதிபா என்ற மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  புதுடெல்லியில் பிரணவ் என்ற மாணவனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதே போல விழுப்புரத்தைச் சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த பிரதிபா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
 
அதேநேரத்தில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும், மத்திய அரசும் தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close