தமிழகத்தில் தானமாக பெறப்படும் உறுப்புகள் வெளிநாட்டினருக்கு ஏற்றுமதி: அன்புமணி காட்டம் 

  சுஜாதா   | Last Modified : 13 Jun, 2018 05:52 am
donation-of-tissues-and-organ

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் தானமாக பெறப்பட்ட இதயம், நுரையீரல்   வெளிநாட்டவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. தானமாகப் பெறப்பட்ட உடல் உறுப்புகள் இங்குள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்தாமல், வெளிநாட்டவருக்கு வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும் என அன்புமணி ராமதாஸ்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
“உடல் உறுப்பு தான முறைகேடுகள் தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. சென்னையில் கடந்த சில மாதங்களில் மட்டும் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் தானமாக பெறப்பட்ட 4 இதயங்களில் 3 இதயங்கள் வெளிநாட்டவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மத்திய சுகாதார சேவைகள் இயக்குனரகம் நடத்திய விசாரணையில் அதைவிட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2007-ஆம் ஆண்டில் மட்டும் தானமாக பெறப்பட்ட இதயங்களில் 25 விழுக்காடும், நுரையீரல்களில் 33 விழுக்காடும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதயமும், நுரையீரலும் ஒன்றாக மாற்ற வேண்டிய இந்திய நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் காத்திருக்கும் நிலையில் கடந்த ஆண்டு 6 பேருக்கு மட்டுமே இதயமும், நுரையீரலும் தானமாக வழங்கப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில் 32 வெளிநாட்டவர்களுக்கு இதயமும், நுரையீரலும் ஒன்றாக தானமாக வழங்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

உடல்தான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் தான் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன என்பதால், அங்கு தான் இந்த முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முறைகேடுகளுக்கு தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று ஆணையமும் துணை போயிருக்கிறது என்பது தான் கூடுதல் அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தான முறைகேடு மிகவும் தந்திரமான முறையில் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடம் இருந்து உறுப்புகள் தானமாக பெறப்படும் போது, அவை முன்னுரிமை அடிப்படையில் தமிழக மருத்துவமனைகளில் உள்ள உள்நாட்டு நோயாளிகளுக்குத் தான் பொருத்தப்பட வேண்டும். ஒருவேளை தமிழகத்திலுள்ள இந்திய நோயாளிகளுக்கு உடல் உறுப்புகள் தேவைப்படாவிட்டால், பிற மாநிலங்களில் உள்ள இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கும் தேவையில்லை என்றால் மட்டுமே வெளிநாட்டு நோயாளிகளுக்கு அவற்றை பொருத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

ஆனால், சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் உள்ளூர் நோயாளிக்கு தேவைப்படுவதாக உறுப்புகளை வாங்கி, அவற்றை சட்டவிரோதமாக வெளிநாட்டு நோயாளிகளுக்கு பொருத்தியுள்ளன. உள்ளூர் நோயாளிக்கு கடைசி நேரத்தில் காய்ச்சல் ஏற்பட்டு விட்டது, அவருக்கு அறுவை மருத்துவம் செய்யும் நிலையில் அவரது உடல்நிலை இல்லை என்பன போன்ற சொத்தையான காரணங்களைக் கூறி, அவர்களுக்கான உறுப்புகளை வெளிநாட்டவருக்கு தனியார் மருத்துவமனைகள் பொருத்தியுள்ளன. இதன் பின்னணியில் கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியர்களின் உறுப்புகள் இந்தியர்களுக்கு பொருத்தப்படாமல் வெளிநாட்டவருக்கு பொருத்தப்பட்டதை மருத்துவ சேவையாகப் பார்க்க முடியாது. மாறாக உடல் உறுப்பு வணிகமாகவே பார்க்க வேண்டும். இந்தியர்களின் உயிர்களை விட வெளிநாட்டவரின் உயிர்கள் தான் முக்கியம் என்பது போல தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

தானமாக வழங்கப்படும் உடல் உறுப்புகள் சரியானவர்களுக்கு பொருத்தப்பட்டனவா? என்பதை உறுதி செய்வது தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் முதன்மைப் பணியாகும். ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த 95 பேருக்கு 127 உறுப்புகள் விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக உடல் உறுப்பு மாற்று ஆணையம் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த மருத்துவமனை மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விசித்திரமாக உள்ளது; இதை நம்ப முடியவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மாணவர் ஹிதேந்திரன் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்ததைத் தொடர்ந்து அவரது உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டன. அதன்பிறகு தான் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நான், உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்தேன்.

இதற்காக தேசிய உடல் உறுப்பு தானத் திட்டத்தை அதே ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தேன். அந்த வகையில் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை நினைத்து பெருமிதம் கொண்டிருந்தேன். ஆனால், சுயநலக்காரர்கள் சிலரால் தமிழகம் உடல் உறுப்பு சந்தையாக மாற்றப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

மருத்துவத்தில் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்நாட்டினருக்கு முன்னுரிமை வரிசைப்படி வழங்கப்பட்டது போக மீதமுள்ள உடல் உறுப்புகள் மட்டுமே வெளிநாட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்படுகின்றன. இதில் 0.001% கூட விதிமீறல் நடப்பதில்லை. கிட்டத்தட்ட அதேபோன்ற விதிமுறைகள் தமிழகத்தில் இருக்கும் போதிலும் அவை தந்திரமாக மீறப்பட்டிருப்பது உள்ளூர் நோயாளிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்.

இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தான் ஆணையத் தலைவராக இருந்த மருத்துவர் பாலாஜி பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அவர் மீதும் எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. விதிகளை மீறி உடல் உறுப்புகள் வெளிநாட்டவருக்கு பொருத்தப்பட்டதால் உள்ளூர் நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா? எவரேனும் உறுப்பு வழங்கப்படாததால் உயிரிழந்துள்ளனரா? என்பது குறித்து விசாரித்து அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுவதுடன் இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close