சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு; வெளிநடப்பு செய்த தி.மு.கவினர்

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 12:11 pm

dmk-mlas-walked-out-from-tn-assembly-for-not-allowing-to-speak-about-actor-sv-sekar

நடிகர் எஸ்.வி.சேகர் கைது குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் அவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது எஸ்.வி.சேகரை கைது செய்யாதது குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவர் தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தி.மு.கவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர், "பத்திரிக்கையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் முகநூலில் பதிவு செய்ததற்கு எதிராக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து, அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை கைது செய்ய காவல்துறை தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், எஸ்.வி.சேகரோ தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடுகிறார். அரசு அவரை கைது செய்ய தயங்குகிறது. மத்திய அமைச்சர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கெடுத்துள்ளார். 

சமீபத்தில் இரு தினங்களுக்கு முன்பாக கூட, அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சங்கம் சார்பில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் சின்னத்திரை நடிகர் என்ற அடிப்படையில் எஸ்.வி.சேகர் நேரில் வந்து வாக்களித்துள்ளார். அவர் போலீஸ் பாதுகாப்புடன் வந்துள்ளது தான் இங்கு கவனிக்க வேண்டியது. மேலும், அங்கு உயர் அதிகாரிகள் எல்லாம் இருந்துள்ளார்கள். தலைமை செயலரின் உறவினர் என்பதால் அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. 

இதுகுறித்து இன்று சட்டப்பேரவையில் தி.மு.க சார்பில் நாங்கள் பேச முற்பட்ட போது சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்" என்றார்.  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close