நாளைத் தீர்ப்பு: கவிழுமா அதிமுக ஆட்சி? பதற்றத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் 

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 04:16 pm

judgement-day-will-aiadmk-regime-collapse-eps-ops-in-anxiety

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் நாளைத் தீர்ப்பு வெளியாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன.

கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-கள் 18 பேர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால், இந்த கடிதம் குறித்து ஆளுநர் எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் காலம் தாழ்த்தினார். இந்தநிலையில், 18 எம்.எல்.ஏ-க்களையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

இதை எதிர்த்து எம்.எல்.ஏ-க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சபாநாயகர் உத்தரவு தொடர்பாக பரபரப்பு உத்தரவு வெளியாகும் என்று இந்தியாவே சென்னை உயர் நீதிமன்ற வாசலில் காத்திருந்தது. பிரபல வக்கீல்கள் கபில் சிபல் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் எல்லாம் இந்த வழக்கில் வாதாட சென்னை உயர் நீதிமன்றம் வந்தனர். ஆனால், சபாநாயகர் மற்றும் முதல்வர் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமி அரசு தப்பியது. 

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி முடிந்து இன்னும் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் இருக்கிறது. கோடை விடுமுறைக்குப் பின் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தெரிவித்தது. எனவே தற்போது கோடை விடுமுறை முடிந்து உயர் நீதிமன்றம் செயல்படத் துவங்கியுள்ளதால் நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் திமுக, டிடிவி.தினகரன் தரப்பு மட்டுமல்லாது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினரும் எதிர்பார்த்துத் தவித்துக் கிடக்கின்றனர். காரணம், இந்தத் தீர்ப்புக்குப்பிறகு அ.தி.மு.க அரசு கவிழ்ந்து விடும் எனத் திமுகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், டிடிவி தினகரனும் மேடைகள் தோறும் முழக்கமிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு எந்த வகையில் வந்தாலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. 

தகுதி நீக்கம் செல்லும் எனத் தீர்ப்பு வந்தால், அந்த 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பிருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் அ.தி.மு.க-விற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் எனக் கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். அந்த 18 தொகுதிகளில் தினகரன் அணி வேட்பாளர்களோ அல்லது திமுக வேட்பாளர்களோ, யார் வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆளும் அ.தி.மு.க அரசு ஆட்சியைப் பறிகொடுக்கும் பரிதாப நிலை ஏற்படக்கூடும். 

அதேவேளை 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லாது எனத் தீர்ப்பு வந்தால், தினகரன் அணியுடன் சேர்ந்து தனி அணியாகச் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக அவர்கள் செயல்படுவார்கள். இந்த ஆட்சியை ஒழித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் தினகரன் தரப்பினர் திமுகவுடன் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க நிச்சயம் முற்படுவர். அதற்கான முயற்சியைத் திமுகத் தரப்பும் கையில் எடுக்கும் என உறுதியாக நம்பப்படுகிறது. 

இந்த வழக்கின் தீர்ப்பு எந்த வகையில் வெளியானாலும் எப்படிக் கையாள்வது எனச் சபாநாயகர் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பலமுறை தீவிர ஆலோசனை நடத்தி வந்திருக்கிறார். அதேவேளை 18 எம்.எல்.ஏ-க்களில் சிலரைப் பதவி ஆசை காட்டி தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியிலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புத் தீவிரமாக ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறது.

ஒரு சில எம்.எல்.ஏ-க்கள் தவிர்த்து மற்ற அனைவரும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவ தயாராக இருப்பதாகவும் இதற்கு பல வகையில் ராஜ உபசரிப்பு நடந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பில் அ.தி.மு.க-வின் அரசியல் எதிர்காலம் அடங்கியிருப்பதால் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் என்ன நடக்கும் என்பதைத் தீர்மானிக்க இயலாமல் பதற்றத்தில் ஆட்டம் கண்டு கிடக்கின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close