ஊடகங்களை மிரட்டும் இ.பி.எஸ் அரசு... ஜெயா டிவியுடன் கைகோர்த்த சன் டிவி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 28 Jun, 2018 04:12 pm

sun-tv-on-hand-with-jaya-tv

டி.டி.வி.தினகரன் தரப்புக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே உள்ள மோதல்தான் தற்போதைய அரசியலின் உச்ச கட்டம். 

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதன் பிறகு எங்கே அ.தி.மு.கவை கைப்பற்றி விடுவாரோ என்கிற அச்சத்தில் தினகரனின் அரசியலை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கி இருக்கிறது ஈ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க அரசு. 

அதன் ஒரு கட்டமாக, டி.டி.வி.தினகரன் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பும் ஊடங்களை நசுக்கும் வேலையை தீவிரப்படுத்தி வருகிறது ஈபிஎஸ் அணி. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளுக்கு தினகரன் ஆதரவாளர்களை அழைக்க கூடாது. அவரின் செய்தியாளர்கள் சந்திப்பை மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப கூடாது. இதையும் மீறி உங்கள் தொலைக்காட்சியில் அவர் சம்பந்தமான செய்திகள் அதிகம் வந்தால் அரசு கேபிளில் உங்கள் சேனல் வராது’ என்கிற ரீதியில் அரசு தரப்பில் இருந்து மிரட்டல்கள் வருகிறதாம். 

இந்த மிரட்டலுக்கு பிறகு பெரும்பாலான சேனல்கள் தினகரன் பற்றிய செய்திகளை அடக்கியே வாசிக்கின்றன. சமீபத்தில் கோவையில் ஒரு நிகழ்ச்சியை புதியதலைமுறை தொலைக்காட்சி நடத்தியது. இந்த விவகாரத்திற்கு பிறகு அந்த சேனல் அரசு கேபிளில் பின்னுக்கு தள்ளப்பட்டது. இதனால், பீதியடைந்த அந்த தொலைக்காட்சி நிர்வாகம் அரசை பகைத்து எதிர்த்துக்கொள்ள வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளதாம். ஆகவே, டி.டி.வி.தினகரன் பற்றிய செய்திகளை குறைத்துக் கொண்டுள்ளது.  முக்கியமாக விவாத நிகழ்ச்சிகளில் தினகரன் தரப்பு ஆட்களை இவர்கள் அழைப்பதே இல்லை எனக்கூறப்படுகிறது. 

அரசின் இந்த அடக்குமுறைகளுக்கு பல தொலைக்காட்சிகள் மிரண்டு கிடக்கின்றன. ஆனால், சன், ஜெயா ஆகிய சேனல்களை மட்டும் அரசாங்கத்தால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. சன் டிவியிடமும் அரசு தரப்பிலிருந்து பேசியிருக்கிறார்கள். ‘ஜெயலலிதா இருந்தபோது அரசு கேபிளில் சன் நியூஸ் வராமல்தான் இருந்தது. இப்போ கொஞ்ச நாளா வருது. திரும்பவும் கட் பண்ணினாலும் பண்ணிக்கோங்க. ஆனால் நியூஸில் காம்ப்ரமைஸ் பண்ண முடியாது...’ என உறுதியாக மறுத்து விட்டார்களாம்.

ஜெயா டிவியும், சன் டிவியும் மட்டும் தினகரன் செய்திகளை மாறி மாறி இடைவிடாமல் ஒளிபரப்பி வருகின்றன. எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிரான செய்திகளையும், மக்களின் பேட்டிகளையும் தொலைக்காட்சிகளில் செய்தியாக்க வேண்டாம் என்றும் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு அரசுத் தரப்பிலிருந்து மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கிறதாம். இதனால், ஊடகத்துறையினர் கலக்கத்தில் உள்ளனர். ஆனால், இந்த விஷயத்தில் ஜெயா டிவியுடன் கைகோர்த்து நிற்கிறது சன்.டி.வி! விவகாரம் மக்கள் பிரச்னையை ஒளிபரப்புவதில் இல்லை. டி.டி.வி.தினகரன் செய்திகளை ஒளிபரப்புவதில்... சன் டிவி  டி.டி.வி.தினகரன் செய்திகளுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

இந்த அரசியல புரிஞ்சுக்கவே முடியல..!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close