ஜல்லிக்கட்டு போட்டியில இத்தனை விஷயங்கள் இருக்கா? செம அதிர்ச்சி தகவல்! விரிவான அலசல்!

  சாரா   | Last Modified : 16 Jan, 2020 08:52 am
pongal-special-shall-we-go-vadivasal-to-see-the-jallikattu

வீரத்துக்கு பெயர் போனவன் தமிழன் என்று சொல்வதற்கு காரணம் உண்டு. வீர விளையாட்டுகளில் தமிழன் கலந்துகொள்ள காரணம் அதில் கிடைக்கும் பரிசு அல்ல... வெற்றி பெற்றதும் வீரன் டா.. நான் தமிழன்டா என்று தலைநிமிர்ந்து வரும் வீறுநடைக்காகத்தான். அந்தக் காலத்தில் பெண்ணை மணம் முடிக்க வரும் மாப்பிள்ளை பாரம்பரிய விளையாட்டு ஒன்றிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அவற்றில் ஒன்று ஜல்லிக்கட்டு... இதற்கு ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு, சல்லிக்கட்டு என்ற பெயரும் உண்டு. ஏறு என்பது காளை மாடை குறிக்கும். ஒற்றை மாடை ஓட விட்டு நான்கு புறமும் மனிதர்கள் ஓடி யார் ஒருவன் மாட்டை அடக்கியோ கொம்பை பிடித்து வீழ்த்தியோ  மாட்டை ஆள்கிறானோ அவனே வெற்றி பெற்றவன் ஆவான்.

பழந்தமிழர் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறு தழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் கொல்லேறு தழுவுதல் என்றும் அழைக்கப்பட்டது. புதுதில்லி தேசியக் கண்காட்சியில் சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரையில் காளையை அடக்க வரும் வீரரை காளை தூக்கியெறிவது போன்று உயிரோட்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கலித்தொகைக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய கோட்டிற்கு அஞ்சும் பொதுவனை மறுபிறப்பினும் ஆயர் மகள் தழுவாள் என்று கூறியுள்ளார். காளையை அடக்கும் வீரன் மணமாகதவன் எனில் அவனை மணம்புரியவே பெண்கள் விரும்புவார்கள். இந்த ஏறுதழுவுதலுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் வித்தியாசம் உண்டு. ஏறுதழுவுதல் வீர விளையாட்டுக்காக நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு தெய்வ வழிபாடோடு தொடர்புடையதாக மாறியுள்ளது. அதனால்தான் இயற்கைக்கும், உழவுத்தொழிலில் உதவிசெய்யும் உயிரினங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் பொங்கல் பண்டிகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

முற்காலத்தில் மாட்டின் கழுத்தில் புளியங்கம்பினால் வளையம் செய்து கட்டிவிடுவார்கள். இந்த வளையத்துக்குத்தான் சல்லி என்று பெயர். தங்க நாணயத்தை வண்ணத்துணிகளில் முடித்து மாட்டின் கொம்பில்  கட்டிவிடுவார்கள். அதனால்தான் இதற்கு சல்லிக்கட்டு என்று பெயர். இது தான் இப்போது ஜல்லிக் கட்டாக மாறிவிட்டது. மாட்டை ஆளும் வீரனுக்கு அந்த கொம்பிலுள்ள நாணயம் சொந்தமாகும். நாணயம் தங்கமாகவும் இருக்கலாம். வெள்ளியிலும் இருக்கலாம். ஏன் ஒற்றை நாணயமாகக் கூட இருக்கலாம். ஆனால் வீரன் என்பதை நிரூபிக்கத்தான் இந்தப் போட்டி என்பதால் வாலிப துள்ளலுடன் திரியும் இளவட்டங்களும்... இன்னும் வாலிபன் தான் என்ற மமதையில் மத்திய வயதினரும்.. என்றும் 16 வயது மார்க்கண்டேயனாக்கும் என்று அறுபதைத் தாண்டிய பெருசுகளும், பொடிசுகளும் மாட்டை அடக்க முயல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றாலும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடத்தப்படுகிறது. காளைகள் திடலில் அவிழ்த்துவிடப்பட்டு, கட்டுப்பாடு இல்லாமல் ஓடும்போது இளைஞர்கள் காளையை விரட்டி செல்வார்கள். இது வேலி மஞ்சுவிரட்டு என்று அழைக்கப்படுகிறது. வடதமிழகத்தில் வடம் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  தேரைக் கட்டி இழுப்பது போல் காளையை 20 அடி நீளக் கயிற்றால் கட்டி ஆண்கள் இழுத்துப் பிடிக்க ஒரு சிலர் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுப்பார்கள். உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை விரட்டிச்சென்று அதன் திமில் மீது தொங்கியபடி காளையை அடக்குவார்கள்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையன்று நடத்தப்படும் ஜல்லிக்கட்டு தமிழகத்தின் முக்கிய இடங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது. திருச்சி, திண்டுக்கல்,சேலம், திருவண்ணாமலை,தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் ஜல்லிக்கட்டும் என அனைத்தும் சிறப்பாக நடக்கும். மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண ஒட்டு மொத்த மக்களும், பக்கத்து ஊர்களிலிருந்தும், அண்டை மாநிலத்திலிருந்தும் ஏன் வெளிநாட்டிலிருந்தும் கூட  ரசிகர்கள் வாடிவாசலைத் தேடிவருவார்கள். 

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவிருக்கும் மாடுகளுக்கு தனி பயிற்சி அளிக்கப்படுகிறது. திமில்கள் திமிற, தில்லாக ஓடிவரும் காளையை அடக்க துள்ளிவரும் காளையர்களுக்கு காயம் ஏற்பட்டாலும் வீரத்தழும்பாகவே பார்க்கப்படுகிறது. மாடுகளுக்கு கொம்பு சீவி விடப்பட்டு, என்னை பிடித்து தான் பாரேன் என்று காளையும்.. பிடிக்கத்தான் போறேன் என்று காளையரும் போட்டி போடுவதை வாயில் கரும்புடன் ருசித்து பார்க்கும் அழகே தனிதான். தமிழர்களின் பாரம்பரியத்தில் ஊறி திளைத்துப் போன ஜல்லிக்கட்டைக் காண  வாடிவாசல் போவோமா?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close