சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!

  அனிதா   | Last Modified : 06 Dec, 2019 03:24 pm
pakistani-young-women-sold-to-chinese

 

பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் சீனர்களுக்கு மணமகள்களாக விற்கப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தானும், சீனாவும் நெருங்கிய உறவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கு சீனா மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பல வகையில் உதவி வரும் நிலையில் தற்போது வரை நட்பு நாடாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் 629 பேர் திருமணத்திற்காக சீனர்களுக்கு விற்கப்பட்டுள்ளதும், அவர்கள் சீனாவுக்கு அழைத்து செல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் பெண்கள் மணமகள்களாக கடத்தப்படுவது தெரியவந்துள்ளது. ஆனால், சீனாவுடனான உறவு பாதிக்கப்படும் என்பதால், திருமணத்திற்காக பெண்கள் விற்கப்படும் விவகாரம் குறித்து விசாரிப்பதற்கு உயரதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும்  அக்டோபர் மாதம், பெண்கள் விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 31 சீனர்களை பாகிஸ்தான் கோர்ட் விடுதலை செய்தது. இந்த வழக்கில், தொடர்புடைய பெண்களுக்கு மிரட்டல் விடப்பட்டதாகவும், சிலருக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும், ஒரு சிலர் விசாரணையின் போது உண்மையை கூறியிருந்தும் அதனை போலீசார் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என்றும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

பெண்கள் விற்பனை தொடர்பாக விசாரித்து வந்த விசாரணை அதிகாரிகளுக்கு போலீசார் கடும் நெருக்கடி கொடுத்ததாகவும், சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அரசிடம் இது குறித்து எடுத்து கூறியும் கவனம் செலுத்தவில்லை என்றும் சீனாவிற்கு விற்கப்பட்ட பெண்களை மீட்டு வருவதில் முக்கிய பங்காற்றிய சலீம் இக்பால் கூறுகிறார். இது குறித்து பாகிஸ்தான் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

விசாரணை நடத்துக்கூடாது என நெருக்கடி கொடுப்பதால், குற்றவாளிகள் தைரியமாக பெண்களை கடத்தி வருகின்றனர். மனிதநேரம் என்பது இங்கு இல்லை என பெண்கள் புலம்புகின்றனர். 

பாகிஸ்தான் பெண்களை கடத்தி வருவது தங்களுக்கு தெரியாது எனக்கூறும் சீன வெளியுறவு அமைச்சகம், சீனா மற்றும் பாகிஸ்தான் மக்கள், விருப்பப்பட்டு தங்களுக்கு இடையே உறவு ஏற்படுத்தி கொண்டால், அதனை வரவேற்கிறோம். அதேநேரத்தில், சட்டவிரோதமான திருமண நடவடிக்கைகளை ஆதரிக்க முடியாது என தெரிவித்தது.

கடந்த 2018 முதல் ஏப்ரல் 2019 வரை பாகிஸ்தானில் இருந்து திருமணத்திற்காக விற்கப்பட்ட 629 பெண்களின் அடையாளங்கள், ஆவணங்களின் பதிவுகளை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். அதில், அந்த பெண்களின் தேசிய பதிவெண், சீன கணவர்களின் பெயர்கள், திருமண தேதி ஆகியவை இடம்பெற்றுள்ளன. அனைத்து இளம்பெண்களும், குடும்பத்தினரால் விற்கப்பட்டது தெரியவந்துள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானிய அதிகாரிகள் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சீன மற்றும் பாகிஸ்தானிய இடைத்தரகர்கள், மணமகனிடம் இருந்து பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 40 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை வாங்குகின்றனர். ஆனால், மணமகள் குடும்பத்திற்கு 2 லட்சம் மட்டுமே வழங்குகின்றனர். சீனாவிற்கு விற்கப்படும் பெண்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு கட்டாய கருவுறுதல் பரிசோதனை மற்றும் உடல் ரீதியிலும் பாலியல் ரீதியிலும் துன்புறுத்தல் நடந்ததும், சில பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டதும் தெரியவந்துள்ளது என கூறினார். 

இந்நிலையில், விசாரணை அதிகாரிகள், 'போலி சீன திருமண வழக்குகள்' என்ற தலைப்பில் அறிக்கை தயாரித்து பிரதமர் இம்ரான் கானிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கையில், பெண்கள் விற்கப்படுவது தொடர்பாக 52 சீனர்கள் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 31 சீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக திருமணம் நடத்தி வைக்கும் இரண்டு இடங்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஏழை முஸ்லிம்களை குறிவைத்து இடைத்தரகர்கள் செயல்படுவது தெரியவந்தது. இதில் தொடர்புடைய முஸ்லிம் மதகுரு ஒருவர் தலைமறைவாகியுள்ளார். 31 சீனர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 21 சீனர்கள் மீதான வழக்கு பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. ஆனால், இந்த வழக்குகளில் ஜாமின் கிடைத்ததும் சீனர்கள், அங்கிருந்து தப்பி சென்று விடுகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close