பெண்ணின் மானத்திற்காக உயிரைக் கொடுத்த இளைஞருக்கு ரூ.10,00,000 முதல்வர் அறிவிப்பு!

  சாரா   | Last Modified : 09 Jan, 2020 12:39 pm
10-lakhs-for-bravery

திருவள்ளூர் செம்பரப்பாக்கம் பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை (29) ஷேர் ஆட்டோ வழி மறித்துள்ளது. அந்த ஆட்டோவில் டிரைவர் மற்றும் இரு ஆண்கள் இருந்துள்ளனர். அது அந்த வழியாக வழக்கமாக செல்லும் ஷேர் ஆட்டோ தான் என நம்பிய அந்தப் பெண், ஷேர் ஆட்டோவில் ஏறி அமர்ந்துள்ளார். ஆனால் வழக்கமாக செல்லும் சாலையில் ஆட்டோ செல்லாமல், வழிமாறிச் சென்றதும்,  சந்தேகமடைந்த அந்தப் பெண் ஷேர் ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். 

அப்போது ஆட்டோவில் அமர்ந்திருந்த மற்ற இரு ஆண்களும் அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளனர். இதற்கிடையே அந்த ஆட்டோ, கடம்பத்தூர் அருகேயுள்ள கொண்டஞ்சேரி கிராமத்தை அடைந்தது. கிட்டத்தட்ட 13 கிமீ தூரத்தைக் கடந்து வந்து விட்ட நிலையில் ஏதோ விபரீதம் நடக்க இருப்பதை உணர்ந்து அந்தப் பெண் உதவிக்காக கூச்சலிட்டுள்ளார். 

ஷேர் ஆட்டோவில் இருந்து ஒரு பெண்ணின் ‘காப்பாற்றுங்கள்’ என்கிற அபயக்குரல் கேட்டதும், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த 5 இளைஞர்கள் ஷேர் ஆட்டோவை விடாமல் துரத்தியுள்ளனர். இளைஞர்கள் தங்களைத் துரத்துவதைப் பார்த்ததும், ஆட்டோவில் இருந்தவர்கள் அந்தப் பெண்ணின் கையை விட்டுள்ளனர். உடனே அந்த பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். இதனால் பலத்த காயமடைந்த அந்தப் பெண்ணை துரத்தி வந்த 5 இளைஞர்களில்,  3 பேர் மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மற்ற இரு இளைஞர்களும் தொடர்ந்து ஆட்டோவை துரத்திச் சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆட்டோ மூலம் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மீது ஏற்றிச் சென்று தப்பித்திருக்கிறார்கள். இதில் படுகாயமடைந்த யாகேஷ் என்ற இளைஞர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்நிலையில், பெண்ணைக் காப்பாற்றச் சென்று உயிரிழந்த யாகேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருவள்ளூரில் கடத்தப்பட்ட பெண்ணைக் காப்பாற்றச் சென்று, விபத்தில் உயிரிழந்த இளைஞர் யாகேஷின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். அவருடன் சென்று விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். இந்த சம்பவத்தில் கடத்தல்காரர்களைப் பிடிக்க முயன்ற மேலும் 3 இளைஞர்களுக்கு, அவர்களது தீரத்தைப் பாராட்டி தலா ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close