சூப்பர் ஓவரில் இந்திய த்ரில் வெற்றி! தொடரையும் கைப்பற்றியது!

  சாரா   | Last Modified : 29 Jan, 2020 06:09 pm
india-s-thrill-victory-against-newzland

இந்தியா, நியூசிலாந்து  அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கி ஆடிய இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வெற்றியை எட்ட கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 

முகமது ஷமி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை ராஸ் டெய்லர் சிக்சருக்கு தூக்கினார். அதன் பின்னர் அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். கடைசி 4 பந்தில் வெற்றிக்கு 2 ரன்களே தேவைப்பட்ட நிலையில், ஓவரின் 3வது பந்தில் கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். 4வது, 5வது பந்தில் செய்ஃபெர்ட்டால் ரன்கள் எதுவும் எடுக்க முடியவில்லை. ஆனாலும் ‘பை’ மூலம் ஒரு ரன்னுக்கு ஓடினார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், முகமது ஷமி கடைசி பந்தில் அவரை க்ளீன் போல்டாக்கினார்.

இதனால் நியூசிலாந்து எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த இந்த போட்டி ‘டை’யில் முடிந்தது. பின்னர் கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. பும்ரா வீசிய முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்களை எடுத்த நியூசிலாந்து அணி, 3வது பந்தை சிக்சருக்கும், 4வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டியது. கடைசி பந்தை மார்ட்டின் கப்தில் பவுண்டரிக்கு விரட்ட நியூசிலாந்து அணி 17 ரன்கள் எடுத்தது.

ஒரு ஓவரில் 18 ரன்களை அடிக்க வேண்டிய நிலையில் களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மாவும், கேஎல் ராகுலும் வெற்றியை தட்டிப் பறித்தனர்.  முதல் பந்தில் ரோகித் சர்மா 2 ரன்களும், அடுத்த பந்தில் ஒரு ரன்களும் எடுத்தார். 3வது பந்தை கேஎல் ராகுல் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 4வது பந்தில் ஒரு ரன்னே எடுத்தார். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரோகித் சர்மா 5வது பந்தை இமாலய சிக்சருக்கு அனுப்பினார். பின்னர் கடைசி பந்தையும் லாங்-ஆஃப் திசையில் சிக்சருக்கு தூக்க இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close