ஜல்லிக்கட்டு சட்டவிரோதம்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

  முத்துமாரி   | Last Modified : 18 Jan, 2018 01:54 pm


அரசாணை இல்லாத நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு சட்டவிரோதமாகவே கருதப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. 

ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் குழு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அதன்படி, "ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கடித்த அளித்தோம். ஆனால் அவர்கள் அனுமதி வழங்கவில்லை. மீண்டும் ஒருமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இறுதியில் நேரில் சென்று கேட்டபோது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். எனவே எங்கள் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதி, "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என கடந்த ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. தற்போது 2018ம் ஆண்டுக்கான அரசாணை பிறப்பிக்கப்படாமலேயே ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இது சட்ட விரோதமாகவே பார்க்கப்படுகிறது. அரசாணை பிறப்பிக்கப்படாமல் மதுரையில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு சட்ட விரோதம் தான்" என கூறினார். 

மேலும், விசாரணை முடிவடையாத காரணத்தால் வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close