முதியவர்களை மீண்டும் கருணை இல்லத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

  முத்துமாரி   | Last Modified : 27 Mar, 2018 01:35 pm


காஞ்சிபுரம் கருணை இல்லத்தில் இருந்தவர்களை மீண்டும் அந்த இல்லத்திலேயே ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் தொடர் மரணங்கள் நிகழ்வதாகவும், இறந்தவர்களின் எலும்புகள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அங்கு அரசு அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு கருணை இல்லத்தை மூட உத்தரவிட்டனர். மேலும், கருணை இல்லத்தில் இருந்தவர்கள் வேறு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். 

முறையாக அனுமதி பெற்று நடத்தப்படும் இல்லம் என்பதால், அங்குத் தங்கியவர்களை வேறு இல்லத்துக்கு மாற்ற இல்ல நிர்வாகி தாமஸ் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இல்லத்தில் தங்கியிருந்தவர்கள் சார்பில் ஆட்கொணர்வு மனுவையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

இன்று அந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மொத்தம் 294 பேர் வேறு இல்லங்களுக்கு மாற்றப்பட்டதாகவும், அதில் 12 பேர் மரணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கருணை இல்லம் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், எஞ்சியுள்ள 282 பேரை இன்று மாலைக்குள் கருணை இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், வழக்கை நாளைக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், நாளை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close