மெரினாவில் ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி: தமிழக அரசு மேல்முறையீடு

  Newstm Desk   | Last Modified : 28 Apr, 2018 05:34 pm


மெரினாவில் ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த  சென்னை உயர்நீதிமன்றம்  அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு அளிக்கப்பட்டுள்ளது. 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பல்வேறு நூதன முறைகளில் போராட்டம் நடத்தி வருகிறார். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, பயிர்களுக்கான சரியான விலையை நிர்ணயித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தினார். 

தற்போது காவிரி வாரியம் அமைக்கக்கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார். அதையடுத்து மெரினாவில் தொடர்ந்து 90 நாட்கள் போராட்டம் நடத்த வேண்டும் என அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், தமிழக காவல்துறை தரப்பில் அனுமதி வழங்க மறுக்கப்பட்டது.

அதற்கான விளக்கமளிக்கையில், "உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் இடங்களின் பட்டியலில் மெரினா கடற்கரை இல்லை. அவ்வாறு மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்கும் பட்சத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வழிவகுக்கும். தமிழக கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.க  உள்ளிட்ட கட்சிகள் ஒருநாள் மட்டுமே போராட்டம் நடத்தின. அவர்கள் வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் என போராட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்தினர். எனவே மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது" என தெரிவித்தது. 

இந்நிலையில் நீதிபதிகள் தரப்பில் இருந்து காவல்துறைக்கு பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. நீதிபதிகள் பேசுகையில், "தமிழகத்தில் காவிரி பிரச்னையை விட உங்களுக்கு மெரினா தான் முக்கியமா? பண்டிகை நாட்களில் மெரினாவில் அதிக்கூட்டம் இருந்தபோது உங்களால் கட்டுப்படுத்த முடிந்ததா?" என கேள்வி எழுப்பியது. 

தொடர்ந்து இன்றைய விசாரணையின் முடிவில், "மெரினாவில் தொடர்ந்து 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவது என்பது முடியாதது. அதனால்  ஒருநாள் மட்டும் வேண்டுமானால் மெரினாவில் போராட்டம் நடத்தலாம்" என அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி அளித்துள்ளனர். அனுமதி அளித்த சில மணி நேரத்திலேயே தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து மேல்முறையீடு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close