வருமானத்தை மறைத்த வழக்கில் நடிகை த்ரிஷாவிற்கு விதிக்கப்பட்டு இருந்த அபராதத்தை ரத்து செய்ததில் தவறில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகை த்ரிஷா, 2010 மற்றும் 2011ம் வருடத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாகவும், தனது வருமானம் வெறும் ரூ. 89 லட்சம் மட்டுமே என கணக்கு காண்பித்து புதிய படங்களுக்கு வாங்கிய முன்தொகை சுமார் ரூ.5 கோடியை கணக்கில் காட்டாமல் மறைத்ததாகவும் புகார் வந்தது. இதையடுத்து நடிகை த்ரிஷா வீட்டில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி, 1 கோடியே 16 லட்சம் ரூபாய் அபாரதம் விதித்தனர்.
இதை எதிர்த்து நடிகை த்ரிஷா, வருமான வரித்துறையில் உள்ள மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு தீர்ப்பாயம், அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, வருமான வரித்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஒரு வாரம் முன்பு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் அவர் தீர்ப்பு வழங்கி உள்ளார். அதில், " த்ரிஷாவிற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்தது சரியே. அவர் தனது வருமானத்தை மறைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். இதனால், நடிகை த்ரிஷா நிம்மதி அடைந்துள்ளார்.