அனைத்து ஆர்.டி.ஓ அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 30 Jun, 2018 03:08 pm
cctv-camera-must-be-installed-in-all-rdo-offices

ஊழல் முறைகேடுகளை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான எஸ்.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அவர் அளித்த மனுவில், "நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தற்போது நவீன மின்னணு முறையில் ‘ஹெச் டிராக்’ தேர்வுமுறையை அமல்படுத்த போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முறை குறித்து எங்களுக்கு போதுமான பயிற்சியோ அல்லது விளக்கமோ அளிக்கப்படவில்லை. இதனால் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுகிறது.  எனவே பழைய முறையே தொடர அனுமதிக்க வேண்டும். மின்னணு ‘ஹெச் டிராக்’ முறையை நடைமுறைப்படுத்த தடை விதிக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மனுவின் விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், "ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு முறையை தமிழக அரசு நவீனப்படுத்தியுள்ளது. இதில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் தலையிட முடியாது. எனவே இந்த மனு நிராகரிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகளின் திறமையை முழுமையாக பரிசோதிக்காமல் அவர்களுக்கு உரிமம் வழங்குவதால்தான் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) ஊழல்அதிகரித்துள்ளதாக  கருதப்படுகிறது.

எனவே பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு தான் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளும், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளும் ஒன்றாக இணைந்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். தமிழக லஞ்சஒழிப்புத் துறை சிறப்பாக செயல்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை 3 மாதத்தில் பொருத்த வேண்டும். இந்தக் கேமராக்கள் ஒரு வாரத்துக்கு மேல் செயல்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் தரகர்களையோ அல்லது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஊழியர்களையோ அலுவலகங்களுக்குள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இதற்காக திடீர் சோதனை நடத்தும் வகையில் சிறப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அலுவலர்கள் மீது எவ்வித இரக்கமும் காட்டக்கூடாது. ஆர்டிஓ-க்கள், அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் தற்போதைய அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களையும், பணியில் சேர்ந்தபோது அவர்களுக்கு இருந்த சொத்து விவரங்களையும் ஒப்பிட்டு முறைகேடுகள் இருந்தால் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close