ஹெல்மெட், சீட்பெல்ட் போலீஸ்கார்களுக்கும் கட்டாயம்: ஐகோர்ட்

  சுஜாதா   | Last Modified : 06 Jul, 2018 05:24 am
helmet-sea-belt-must-for-police-too-high-court

போலீசாரும், போலீஸ் அதிகாரிகளும் கண்டிப்பாக ஹெல்மெட், சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று ஐகோர்ட் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் கூறியுள்ளனர்.  

இது குறித்து அவர்கள் கூறியதாவது: கேரளாவில் கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள், நீதிபதி வாகனங்களுக்கு போக்குவரத்து விதிமீறியதாக கூறி போலீசார் அபராதம் விதித்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் மட்டுமல்ல, போலீஸ்காரர்களும் ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர். கார்களில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் போலீஸ் அதிகாரிகள் செல்கின்றனர்.

இதுபோன்ற நிலை மாறவேண்டும். போலீஸ்காரர்கள், போலீஸ் அதிகாரிகள் கண்டிப்பாக ‘ஹெல்மெட்டும்’, ‘சீட் பெல்ட்டும்’ அணிந்துகொண்டு தான் மோட்டார் வாகனங்களை ஓட்டவேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

முன்னதாக, சென்னை கொரட்டூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இது குறித்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 51 லட்சத்து 47 ஆயிரம் மோட்டார் வாகனங்கள் உள்ளன. அதில் 2 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள். அதிக விபத்தில் சிக்குபவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தான். பலியானவர்களில் 70 முதல் 90 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமலும், காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமலும் சென்றவர்கள் தான்.

2016-ம் ஆண்டு ஹெல்மெட் அணியாததால் விபத்தில் 4,091 பேர் இறந்துள்ளனர். அதன்பின்னர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் காரணமாக 2017-ம் ஆண்டு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,956 ஆக குறைந்துள்ளது.

மோட்டார் வாகன சட்டப்படி மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் ஆகிய இருவரும் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும். அதேபோல காரில் டிரைவர் மட்டுமல்ல, பக்கவாட்டில், பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் என்று அனைவரும் கண்டிப்பாக ‘சீட் பெல்ட்’ அணியவேண்டும்.

இந்த சட்ட விதிகளை போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக பின்பற்றினால் விபத்தில் உயிரிழப்பு மிகப்பெரிய அளவில் குறையும். அதனால், இந்த சட்டப்பிரிவையும், விதிகளையும் தீவிரமாக அமல்படுத்தக்கோரி போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோரிடம் கடந்த மார்ச் 29-ந்தேதி மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் கோரிக்கையை பரிசீலிக்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close