நீலகிரி: யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 சொகுசு விடுதிகளை இடிக்க உத்தரவு!

  முத்துமாரி   | Last Modified : 10 Aug, 2018 01:06 pm

sc-ordered-27-luxury-hotels-should-be-demolish-within-48-hours-in-nilagiri

நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 சொகுசு விடுதிகளை 48 மணி நேரத்தில் இடித்து அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் முதுமலைப்பகுதியில் ஆண்டுதோறும் கடநாடு, மசினகுடி, உள்ளத்தி, தெப்பக்காடு உள்ளிட்ட வழித்தடங்களில் யானைகள் இடம்பெயர்வதுண்டு. ஆனால், இந்த இடங்களில் தற்போது ஏராளமான குடியிருப்புகள் மற்றும் சொகுசு விடுதிகள் உள்ளதால் வலம் வரும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. 

இது தொடர்பாக  கடந்த 2011ம் ஆண்டு  வன உயிரின காப்பக தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அந்தப்பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், அப்பகுதிகளில் இருப்பவர்கள் தங்களது இடங்களை காலி செய்துவிட்டு அதற்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 

இதனை எதிர்த்து, அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்டோர் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த மதன் பி,லோக்கூர், அப்துல் நசீர், தீபக் குப்தா நீதிபதிகள் அடங்கிய அமர்வு,  யானைகளின் வழித்தடத்தில் எத்தனை விடுதிகள் உள்ளன?  அவற்றின் உரிமையாளர் விபரங்கள் என அனைத்தையும் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது. 

தொடர்ந்து, 39 சொகுசு விடுதிகள் சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார். இவற்றில் பதிலளித்த 12 சொகுசு விடுதிகளை தவிர,  மற்ற 27 சொகுசு விடுதிகளையும் 48 மணி நேரத்தில் இடித்து அகற்ற வேண்டும் என நீதிபதிகள் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். மீதியுள்ள 12 விடுதி உரிமையாளர்களும், அந்த இடத்தில் சொகுசு விடுதி கட்டுவதற்கு அனுமதி வாங்கிய சான்றிதழை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர் அந்த சான்றிதழ் உண்மையானது தானா? என்று ஆய்வு செய்யப்பட்டு, அந்த சொகுசு விடுதிகளையும் அகற்றலாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

இன்று இந்த 27 சொகுசு விடுதிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து 27 விடுதிகளுக்கும் அம்மாவட்ட ஆட்சியர் திவ்யா சீல் வைத்தார்.  மேலும், விடுதிகளை அகற்றும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

முன்னதாக  நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் இருந்த 400 கட்டிடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.