மகனை கருணைக் கொலை செய்யக் கேட்ட தந்தை: கண்ணீர் மல்க மறுத்த நீதிபதி கிருபாகரன் 

  Padmapriya   | Last Modified : 06 Oct, 2018 01:54 pm
euthanasia-hc-asks-centre-tn-govt-to-provide-financial-support-medical-care-to-terminally-ill-boy

நரம்பு மண்டலக் கோளாறு காரணமாக உணர்ச்சியிழந்து  வாழ்ந்து வரும் தனது 10 வயது மகனை கருணைக் கொலை அனுமதி வேண்டி, சிறுவனது தந்தை தாக்கல் செய்திருந்த வழக்கில், அதற்கு அனுமதி வழங்கிட நீதிபதி கிருபாகரன் கண்ணீர் நிறைந்த கண்களுடன் மறுப்பு தெரிவித்தார். சிறுவனுக்கு உதவித்தொகை வழங்கிடுவது குறித்து பதில் அளிக்க அவர் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார். 

கடலூரைச் சேர்ந்த திருமேனி என்பவர் தனது மகனை கருணைக் கொலை செய்திட அனுமதிக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வலிப்பு நோயாலும், மூளை பாதிப்புக்கும் உள்ளாகியுள்ள தனது 10 வயது மகனை , கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி, கடலூரைச் சேர்ந்த திருமேனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கை என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோரை நீதிபதிகளாகக் கொண்ட அமர்வு, சிறுவனை பரிசோதனை செய்வதற்கான மருத்துவ நிபுணர்களை நியமித்து உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, கடலூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவனை,  ஓய்வு பெற்ற நரம்பியல் துறை பேராசிரியர் திலோத்தம்மாள், ஸ்டான்லி மருத்துவமனை இயக்குநர் ரவிச்சந்திரன் மற்றும் காஞ்சி காமகோடி மருத்துவமனை குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர் பால ராமச்சந்திரன் ஆகியோர் பரிசோதனை செய்தனர். 

சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அச்சிறுவனக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.  பின்னர் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள், சிறுவனை குணப்படுத்த முடியாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், சிறுவனுக்கு நிதி உதவி பெற்றுத் தர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். ஆனாலும், பிற்காலத்தில் பெற்றோர் இல்லாமல் போகும் நிலையில் சிறுவனுக்கு ஏற்பட உள்ள சூழலைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயனின் வாதத்தைக் கேட்டதும் நீதிபதி கிருபாகரன் நீதிமன்றத்தில் சபையோர் முன்னிலையிலேயே கண்கலங்கி கண்ணீர் சிந்தினார். பாதிக்கப்பட்ட சிறுவனை பராமரித்துக் கொள்ள தொண்டு நிறுவனம் ஒன்று தயாராக இருப்பதாக மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதை, அச்சிறுவனின் தந்தை ஏற்க மறுத்து விட்டார்.

விசாரணை ஒத்திவைப்பு: 

இதையடுத்து, சிறுவனின் பெற்றோருக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், தொடர் மருத்துவ உதவிக்கும் ஏற்பாடுகள் செய்ய இயலுமா என்பது குறித்தும் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும் இதுபோன்ற சிறுவர்களுக்கு உதவி வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஏன் திட்டம் வகுக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இதன் அடுத்த கட்ட விசாரணையை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close